மக்களின் எதிர்ப்பு எந்த வகையில் வெடிக்கும் என எதிர்பார்க்க முடியாது - அகிலவிராஜ் காரியவசம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 11, 2022

மக்களின் எதிர்ப்பு எந்த வகையில் வெடிக்கும் என எதிர்பார்க்க முடியாது - அகிலவிராஜ் காரியவசம்

(எம்.ஆர்.எம்.வசீம்)

மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வுகாண வேண்டும். இல்லாவிட்டால் மக்களின் எதிர்ப்பு எந்த வகையில் வெடிக்கும் என எதிர்பார்க்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சி உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

69 இலட்சம் மக்களும் பாரிய எதிர்பார்ப்புடனே அரசாங்கத்துக்கு வாக்களித்தனர். என்றாலும் தற்போது அவர்களின் எதிர்பார்ப்பு முற்றாக வீணாகி இருக்கின்றது. மக்களுக்கு அன்றாடம் வாழ்க்கை செலவை தாங்கிக் கொள்ள முடியாத வகையில் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.

அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்து வருகின்றது. பணம் இருந்தாலும் பொருட்களை பெற்றுக் கொள்ள வரிசையில் இருக்க வேண்டி நிலை. இந்த நிலைமையை மக்கள் அரசாங்கத்திடம் எதிர்பார்க்கவில்லை. அரசாங்கத்தின் மோசமான தீர்மானங்களால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது நடுத்தர மக்களாகும்.

அத்துடன் அரசாங்கத்தின் இரசாயன உரம் தொடர்பான உடனடி தீர்மானத்தால் அனைத்து விவசாய உற்பத்திகளும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணாமல் அரசாங்கம் நாட்டு வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்துவருகின்றது.

அடுத்துவரும் 3 வருடங்களுக்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எந்த வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை. மாறாக பணம் அச்சிடும் நடவடிக்கையையே மேற்கொண்டு வருகின்றது. அதனால் எதிர்காலத்தில் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயமே இருக்கின்றது என்றும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment