ஒமிக்ரோனை தற்போது கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் இலங்கையின் பிரதான வைரஸாக உருவெடுக்கும் - விசேட வைத்திய நிபுணர் நதீக ஜானக எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 4, 2022

ஒமிக்ரோனை தற்போது கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் இலங்கையின் பிரதான வைரஸாக உருவெடுக்கும் - விசேட வைத்திய நிபுணர் நதீக ஜானக எச்சரிக்கை

(எம்.மனோசித்ரா)

வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்கள் மாத்திரமின்றி, உள்நாட்டு வைத்தியசாலைகள் சிலவற்றிலும் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் சமூகத்திலும் கணிசமானளவு ஒமிக்ரோன் தொற்றாளர்கள் காணப்படுகின்றனர் என்பது தெளிவாகிறது. இந்த நிலைமையை தற்போது கட்டுப்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் ஒமிக்ரோன் இலங்கையின் பிரதான வைரஸாக உருவெடுக்கும் என்று அரச மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் விசேட வைத்திய நிபுணர் நதீக ஜானக தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் வைரஸ் இனங்காணப்பட்டு இரு ஆண்டுகள் கடந்தும் அதன் அபாயம் இன்னும் குறைவடையவில்லை. இந்த ஆண்டிலாவது கொவிட் அச்சுறுத்தலிலிருந்து மீள முடியுமா என்பதே எம் அனைவரதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றில் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ள சமூகத்தின் மத்தியிலும் டெல்டாவை விட ஒமிக்ரோன் வேகமாகப் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொற்றாளர் எண்ணிக்கையும், மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரோன் பிறழ்வு வேகமாக பரவத் தொடங்கினால் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், தொற்றாளர்கள் தீவிர நிலைமையை அடைவதும் அதிகரிக்கும். இவ்வாறான அபாயங்களை தவிர்ப்பதற்கு மூன்றாம் கட்ட தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானதாகும்.

எனினும் நாட்டு மக்கள் மத்தியில் நிலவும் சில அடிப்படையற்ற மூட நம்பிக்கைகளின் காரணமாக மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதற்கு முன்வராமலுள்ளனர். இது தவறான தீர்மானமாகும்.

எனவே முதலிரு கட்டங்களாகவும் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டவர்களும் தொற்றிலிருந்து குணமடைந்து 3 மாதங்களின் பின்னர் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதே போன்று மாணவர்களும் உரிய காலத்தில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இலங்கையில் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் தொற்றாளர்களில் பெருமளவானோர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களாவர். எனினும் சில வைத்தியசாலைகளிலும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கமைய சமூகத்தில் கனிசமானளவு இனங்காணப்படாத ஒமிக்ரோன் தொற்றாளர்கள் உள்ளனர் என்பது உறுதியாகிறது. இதே நிலைமை தொடருமாயின் எதிர்காலத்தில் ஒமிக்ரோன் இலங்கையின் பிரதான வைரஸாக மாற்றமடைந்து விடும்.

அரச மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் இதுவரையில் 10 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 8 பேர் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களாவர். எஞ்சிய இருவரும் உள்நாட்டில் வைத்தியசாலையில் இனங்காணப்பட்டவர்களாவர். அதற்கமைய சமூகத்தில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் காணப்படுகின்றனர் என்பது தெளிவாகிறது.

எந்த வைரஸ் தொற்று பரவலையும் நூறு வீதம் எம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதிலிருந்து ஏற்படக் கூடிய பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்ளலாம். இதற்கு மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதோடு, அடிப்படை சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதும் அத்தியாவசியமானதாகும் என்றார்.

No comments:

Post a Comment