உலக டென்னிஸ் சாம்பியனுக்கு சார்பாக தீர்ப்பு : மருத்துவ காரணத்தை ஏன் ஏற்கவில்லையென நீதிமன்றம் கேள்வி - News View

About Us

About Us

Breaking

Monday, January 10, 2022

உலக டென்னிஸ் சாம்பியனுக்கு சார்பாக தீர்ப்பு : மருத்துவ காரணத்தை ஏன் ஏற்கவில்லையென நீதிமன்றம் கேள்வி

உலக டென்னிஸ் சாம்பியனான நோவக் ஜோகோவிச்சின் வீசாவை இரத்துச் செய்ய அவுஸ்திரேலிய அதிகாரிகள் எடுத்த முடிவு நியாயமற்றது என்று பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி அவருக்கு அவுஸ்திரேலியாவில் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கிராண்ட் ஸ்லாம் போட்டித் தொடர்களுள் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் எதிர்வரும் 17ஆம் திகதி மெல்பேர்னில் ஆரம்பமாகிறது.

அவுஸ்திரேலிய ஓபனில் கலந்துகொள்ளும் வீரர்கள் அனைவரும் கொவிட்-19 இற்கு எதிரான 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டிருப்பது கட்டாயம் என்ற விதிமுறை போட்டி அமைப்பினால் விதிக்கப்பட்டுள்ளதோடு, கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் குறைந்தது 6 மாத காலத்துக்கு அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அவுஸ்திரேலிய அரசு உத்தரவு வழங்கியுள்ளது.

கொரோனா தடுப்பூசிக்கு எதிரான ஜோகோவிச் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அதேநேரத்தில், இதற்காக ஆஸி ஓபன் போட்டி அமைப்பிடம் இருந்து விசேட விலக்கு பெற்றுள்ளதாக ஜோகோவிச் தெரிவித்திருந்தார். 

தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணர் ஒருவரால் குறிப்பிட்ட மருத்துவ காரணத்திற்காக அவர் விலக்கு பெற்றிருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடப்பு சம்பியனான ஜோகோவிச், அவுஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்வதற்காக துபாய் வழியாக கடந்த புதன்கிழமை (05) இரவு மெல்பேர்ன் விமான நிலையம் வந்தடைந்த நிலையில், அவரது விசா இரத்து செய்யப்படுவதாக அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

ஜோகோவிச் ஆஸ்திரேலியாவில் நுழைவதற்கான தகுந்த ஆதாரங்களை வழங்க தவறிவியதால் அவரின் வீசா இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதுடன், அவர் அங்கு தடுத்து வைக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியர்கள் அல்லாத வெளிநாட்டினர் தகுந்த வீசா வைத்திருக்காவிட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் அல்லது நாடு கடத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே 9 முறை அவுஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றிருக்கும் ஜோகோவிச், ஆஸ்திரேலிய அரசின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவை விசாரணை செய்த அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் ஜோகோவிச்சிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியதோடு, அவுஸ்திரேலிய எல்லை அதிகாரிகள் அவரது வீசாவை இரத்து செய்ய எடுத்த முடிவு நியாயமற்றது என அறிவித்துள்ளது.

அவரது மருத்துவ ரீதியான விலக்கை நிரூபிக்க அவர் இன்னும் என்ன செய்ய வேண்டுமென கேள்வி எழுப்பிய நீதவான், உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஒருவர் தகுதி வாய்ந்த மருத்துவரிடம் இருந்து பெற்ற மருத்துவ காரணம் தொடர்பான விலக்கு ஆவணத்தை அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஏன் ஏற்கவில்லை என கேள்வி எழுப்பினார்.

No comments:

Post a Comment