புகையிரத பாதையில் தரையிறங்கி நொறுங்கிய விமானத்தை மோதிய புகையிரதம் : மயிரிழையில் காப்பாற்றப்பட்ட விமானி - வீடியோ - News View

About Us

About Us

Breaking

Monday, January 10, 2022

புகையிரத பாதையில் தரையிறங்கி நொறுங்கிய விமானத்தை மோதிய புகையிரதம் : மயிரிழையில் காப்பாற்றப்பட்ட விமானி - வீடியோ

அவசரமாக புகையிரத பாதையில் தரையிறக்கப்பட்டு நொறுங்கிய இலகுரக விமானமொன்றை புகையிரதமொன்று மோதிய நிலையில், குறித்த விமானி மயிரிழையில் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

நேற்றையதினம் (09) அமெரிக்காவின் கலிபோர்னியா பிராந்தியத்திலுள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸாரின் உடலில் பொருத்தப்பட்டுள்ள கமெராவில் பதிவாகியுள்ள குறித்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Pacoima எனும் பகுதியிலிருந்து சென்ற இலகுரக விமானம் ஒன்று அது புறப்பட்டு சிறிது நேரத்தில் குறித்த பகுதியில் அவசரமாக தரையிறக்கத்திற்குள்ளாகி நொறுங்கியுள்ளது. 

இந்நிலையில் அதிலிருந்த விமானி வெளியில் வர முடியாமல் சிக்கிக் கொள்கின்றார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த பொலிஸார் மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் காயங்களுக்குள்ளான அவரை வெளியில் எடுத்து மிக வேகமாக இழுத்துச் சென்று மீட்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து ஓரிரு நொடிகளில் குறித்த விமானத்தை அவ்வழியாக வந்த கடுகதி ரயில் வேகமாக மோதிச் செல்கின்றது. இவ்வேளையில் குறித்த விமானம் சுக்கு நூறாக வீசப்படுவது மற்றுமொரு நபரின் வீடியோவில் பதிவாகியுள்ளது.

குறித்த விமானத்தின் ஒரு பகுதி தன்னை தாக்கியதாக, குறித்த வீடியோவை எடுத்த 21 வயதான இளம் இசையமைப்பாளரான, Luis Jimenez என்பவர் தெரிவித்துள்ளார்.

காயங்களுக்குள்ளான காப்பாற்றப்பட்ட குறித்த விமானி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதோடு, அவரது உடல்நிலை சீராக இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த புகையிரத்தில் பயணம் செய்த எவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment