(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு - பொரளையில் தங்க நகை கடையொன்றுக்குள் ஆயுதம் தரித்த அடையாளம் தெரியாத கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாணத்தின் தெற்கு குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நவகமுவ பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையில் சந்தேகநபர் நேற்று (4) கைது செய்யப்பட்டதாக மேல் மாகாணத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பல குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் தொடர் விசாரணைகள் இடம்பெருவதாக அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் கொள்ளைக்காக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் 4 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக கூறிய பொலிஸார், கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்ட மற்றைய சந்தேக நபரை தேடி தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
இந்நிலையில், கொள்ளைச் சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 02 துப்பாக்கிகளும், மோட்டார் சைக்கிளும் கிரி எல்ல - கொரகா எல பகுதியில் களு கங்கையில் மூழ்கடிக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் நேற்று கண்டுபிடித்து மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொள்ளையிடப்பட்ட 32 பவுன் நகையில் 18 பவுன் தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
பொரளை சந்தியை அண்மித்த, பொரளை - மருதானை வீதியில் அமைந்துள்ள தங்க நகைக் கடையில் 2021 டிசம்பர் 11 ஆம் திகதி பிற்பகல் 2.50 மணியளவில் கொள்ளையிடப்பட்டுள்ளது.
முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், வானை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்து, நகைக் கடையில் இருந்தோரை அச்சுறுத்தி இக்கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி, உறுதியாக மதிப்பிடப்படாத போதும், கொள்ளையர்கள் சுமார் 5 பெட்டி நகைகளை எடுத்துச் சென்றுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி 3 மில்லியனுக்கும் அதிகம் என பின்னர் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்தே 5 சிறப்பு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
பொரளை பொலிஸார், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு மற்றும் கொழும்பு தெற்கு வலய குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளை உள்ளடக்கிய 5 பொலிஸ் குழுக்களே இந்த விஷேட விசாரணைகளை ஆரம்பித்ததாக அறிய முடிகிறது.
கொள்ளையர்கள் கொள்ளைக்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் இலக்கம் மற்றும் அது குறித்த தகவல்கள், சி.சி.ரி.வி. காணொளி உள்ளிட்ட அறிவியல் தடயங்களை மையப்படுத்தி இந்த விசாரணைகள் இடம்பெற்ற நிலையிலேயே கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment