வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா சன சமூக சேவா நிலையம் மற்றும் வல்வை உதய சூரியன் கழக நிர்வாகத்தினர் எதிர்வரும் 15ஆம் திகதி நடத்தவுள்ள சர்வதேச பட்டத் திருவிழாவிற்கு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை பிரதம அதிதியாக அழைத்துள்ள நிலையில் புலம்பெயர் தேசங்களில் உள்ள வல்வெட்டித்துறை அமைப்புக்கள் கடுமையான கண்டனத்தினை வெளியிட்டுள்ளன.
ஜேர்மனியை தளமாகக் கொண்டு இயங்கும் வல்வை ஒன்றியம், கனடா, பிரான்ஸ், பிரித்தானியா, அவுஸ்ரேலிய ஆகிய நாடுகளில் செயற்படும் வல்வை நலன்புரிச் சங்கம், மொன்றியல் வல்லை மக்கள் சங்கம், பிரித்தானியாவின் வல்லை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம், கனடா ஒருங்கிணைந்த ப்ளுஸ் விளையாட்டுக் கழகங்கள் ஆகியன இவ்வாற கண்டன அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.
குறிப்பாக, வல்வெட்டித்துறை மண்ணுக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் இனப் படுகொலை அரசாங்கத்தின் அமைச்சரை அழைத்தமையானது வெட்கப்பட வேண்டியதும் கண்டிக்கப்பட வேண்டியதுமாகும் என்று மேற்படி அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
அத்துடன், ஏற்பாட்டாளர்கள் இவ்வாறு அரசாங்கத்துடன் கைகோர்த்து, அரசாங்கம் பொறுப்புக் கூறலில் இருந்து விலகி நின்று, இவ்விதமான தமிழரின் வரலாற்று பெருமை நிறைந்த பண்பாட்டு நிகழ்வுகளை சர்வதேசத்திற்கு நல்லிணக்க அடையாளங்களாக காண்பித்து தப்பித்துக் கொள்வதற்கும் வழிசமைக்கும் செயற்பாடு என்றும் குறிப்பிட்டுள்ளன.
அமைச்சர் நாமல் பங்கேற்கும் சர்வதேச பட்டத் திருவிழாவை அனைத்துப் புலம்பெயர் அமைப்புக்களும் புறக்கணிப்பதோடு அந்த நிகழ்வில் தாயகத்தில் உள்ள மக்களும் பங்கேற்பதை தவிர்க்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளன.
அதுமட்டுமன்றி, இலங்கை அரசாங்கத்தினை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு வலியுறுத்தப்பட்டு வருகையில், இவ்விதமான நிகழ்வுகளில் ஆளும் தரப்பினரை அதிலும் குறிப்பாக யுத்தக் குற்றாச் சாட்டுக்களுக்கு பொறுப்புச் சொல்ல வேண்டியவரின் புதல்வரை அழைப்பானது இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஈடானது என்றும் அவ்வமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.
மேலும், ஏற்பாட்டாளர்கள் எடுத்துள்ள முடிவானது வல்வெட்டித்துறை மண்ணுக்கு காலத்திற்கும் பெரும் அவமானம் என்று கூறியுள்ள மேற்படி அமைப்புக்கள் வரலாற்றுத் தவறுக்கு துணைபோகாது போட்டியாளர்கள் அனைவரும் விலகியிருக்குமாறும் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்வதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கேசரி
No comments:
Post a Comment