புதிய சட்டம் தயாரிக்கப்பட்டதன் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் தாமதமாவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேர்தல் நடத்த அரசாங்கம் தயாராக உள்ளது. தேர்தல் மாற்றம் தொடர்பாக குழுவின் தலைவர் என்ற வகையில் அங்கும் கட்சிகளின் கருத்து கோரப்பட்டது.
தவறான சட்டத்திற்கு அன்று கட்சிகள் கைதூக்கி செய்த தவறினால் இந்த நிலை ஏற்பட்டது. மாகாண சட்டத்தை செயற்படுத்துவதற்கு இன்னும் பல சட்டங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி மற்றும் அன்றிருந்த அரச என்பன இணைந்து அவசரப்பட்டு தவறான சட்டத்தை கொண்டு வந்தார்கள். அதனை முழுமையாக மாற்றி புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும். அதனை தயாரித்ததும் தேர்தல் நடைபெறும் என்றார்.
அமைச்சரவை மாற்றம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், ஜனாதிபதிக்கு எந்த நிமிடமும் அமைச்சர்களை மாற்ற முடியும். ஊடகங்கள்தான் அமைச்சரவை மாற்றம் பற்றி பேசுகின்றன. எந்த அமைச்சரின் விடயதானங்களையும் அவருக்கு மாற்ற முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை புது வருடத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் நேற்று பிற்பகல் நடைபெற ஏற்பாடாகியிருந்தது. புது வருடத்தை முன்னிட்டு அமைச்சு பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
அதாவது மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமாயின் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. அதாவது புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாயினும் அதற்கு பாராளுமன்றத்தில் ஒரு யோசனையை கொண்டுவர வேண்டும். மாறாக பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாயினும் பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணையைக் கொண்டுவந்து நிறைவேற்ற வேண்டியது அவசியமாகும்.
வட மத்திய, கிழக்கு, சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக் காலம் 2017 ஆம் ஆண்டுடன் நிறைவடைந்ததுடன், வடக்கு, வட மேல் மாகாணங்களின் பதவிக் காலம் 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைந்துள்ளது. ஊவா மாகாண சபையின் பதவிக் காலம் 2019 ஒக்டோபரில் நிறைவடைந்தது.
தென் மாகாண சபையின் பதவிக் காலம் 2019 ஏப்ரல் மாதம் 9ஆம் நிறைவுக்கு வந்தது. கடந்த 2018 ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதியுடன் மத்திய மாகாண சபையின் பதவிக் காலம் நிறைவடைந்தது.
இதேவேளை, மேல் மாகாண சபையின் பதவிக் காலம் 2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முறை மாற்றத்தினால் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தொடர்ந்து மாகாண சபைத் தேர்தல் தாமதமாகி வருகிறது.
தேர்தலை பழைய முறையில் நடத்துமாறு சில கட்சிகள் கோரி வருவதோடு சட்ட திருத்தம் செய்து புதிய முறையில் நடத்துமாறு வேறு கட்சிகள் கோரி வருவதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment