கல்முனை பிராந்திய சுகாதார பிரிவில் டெங்கு தாக்கம் அதிகரிப்பு : ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 12, 2022

கல்முனை பிராந்திய சுகாதார பிரிவில் டெங்கு தாக்கம் அதிகரிப்பு : ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள்

பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் ஒரு வார காலத்தினுள் 17 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 17 பேரும், கல்முனை தெற்கு சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 03 பேரும், அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, சாய்ந்தமருது ஆகிய சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் தலா 01 நபருமாக 26 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிக அவதானமாக செயற்படுமாறும் கேட்டுள்ளார்.

மாவட்டத்தில் தற்போது பருவகால மழை பெய்து வருவதால் டெங்கு நுளம்பு பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமெனவும் தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த சுகாதார மேம்பாட்டு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக டெங்கொழிப்பு நடவடிக்கையினை சிறந்த முறையில் முன்னெடுப்பதற்கு சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் தோறும் டெங்கொழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, புகை விசிறும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுவினர், டெங்கொழிப்பு செயலணி, சமூக மட்ட தலைவர்கள் ஆகியோர் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று டெங்கு நோய் தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டல் செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.

வீடுகளுக்கு வரும் டெங்கொழிப்பு குழுவினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுள்ளார்.

டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான வெற்றுக்காணிகளை வைத்திருப்பவர்கள் இரண்டு வார காலத்திற்குள் துப்புரவு செய்ய வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

(ஒலுவில் விசேட நிருபர்)

No comments:

Post a Comment