சகலருக்கும் சமமாகவும் நியாயமாகவும் நாட்டின் வளங்கள் பகிரப்படாமையே தற்போதைய பொருளாதார சிக்கலுக்கு காரணமாகும். யார் ஆட்சிக்கு வந்தாலும் மிகவும் மோசமான ஒரு நிலையில் இருந்தே நாட்டை மீட்க வேண்டி வரும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி (திருமதி) ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
கண்டி தெல்தெனியவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, பொருளாதார செயற்பாட்டில் வளங்கள் சமமாகப் பிரிந்து சென்றால் பாரிய பொருளாதார பிரச்சினைகள் ஏற்படாது. ஆனால் எமது நாட்டு பொருளாதார செயற்பாட்டைப் பொறுத்தவரை குறிப்பிட்ட ஒரு சிறிய குழுவின் கைகளிலே பெருமளவு பொருளாதாரம் தங்கியுள்ளது.
இதனால் பெரும் பாலான மக்கள் மத்தியில் பொருளாதாரம் பாரிய சுமையாக மாறியுள்ளது. இதனால் சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. இது மறுபுறமாக நாட்டு மக்கள் துன்பங்களுக்கு ஆளாகும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் நாட்டில் பாரிய பொருளாதார வீழ்ச்சியை தோற்று வித்துள்ளது. இதற்கும் முறையான தீர்வைப்பெற முயற்சிக்க வேண்டும்.
இன்று நாட்டில் வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் ஏற்றுமதி இறக்குமதி துறையில் பாரிய இடைவெளி காணப்படுகின்றன. அதுவும் எதிர்மறையானதாக உள்ளது.
அதேநேரம் வெளிநாட்டு ஒதுக்கு நிதி, அந்நிய செலாவணி போன்றன பாரிய வீழ்ச்சியைக் காட்டுகிறது. அரச துறையில் சகல வருமானங்களும் குறைவடைந்துள்ளன. இவை அனைத்தையும் இணைத்துப் பார்க்கும் போது நாடு மிகவும் பயங்கரமான ஒரு சூழலை எதிர்கொண்டுள்ளது என்றார்.
அக்குறணை குறூப் நிருபர்
No comments:
Post a Comment