(எம்.மனோசித்ரா)
கடல் மார்க்கமாக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த இரு பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றொருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய கடந்த 4 ஆம் திகதி தங்காலை மற்றும் பெலிக்கட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் 32 வயதுடைய சீனிமோதர பிரதேசத்தைச் சேர்ந்த நபரிடமிருந்து 50 இலட்சத்து 14 ஆயிரம் ரூபா பணமும், 376 கிராம் தங்க ஆபரணங்கள், 10 கிராம் ஹெரோயின் மற்றும் கையடக்க தொலைபேசி என்பனவும் கைப்பற்றப்பட்டன.
குறித்த சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய தெலிகட பொலிஸ் பிரிவில் 60 வயதுடைய பிரிதொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
அவர் தங்கியிருந்த வீட்டினை சோதனைக்கு உட்படுத்திய போது பிஸ்டல் ரக துப்பாக்கியொன்று, 90 இலட்சத்து 2,800 ரூபா பணம், 3 கையடக்க தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த சந்தேக நபர்களால் கடல் மார்க்கமாக போதைப் பொருள் கடத்தல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment