(எம்.ஆர்.எம்.வசீம்)
நாடு எதிர்கொண்டுள்ள பாரிய பிரச்சினையில் இருந்து நாட்டை மீட்கும் வகையில் கொள்கை ரீதியிலான வேலைத்திட்டம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து சக்திகளையும் ஐக்கியப்படுத்தும் தேவையை முன்னிட்டு, முன்னாள் ஆளுநர்களான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, கீர்த்தி தென்னகோன், அஸாத் சாலி மற்றும் சட்டத்தரணிகளான ஷிரால் லக்திலக்க, குணரத்ன வன்னிநாயக்க ஆகியோர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்து கலந்துரையாடி உள்ளனர்.
கொழும்பு 5 இல் இருக்கும் அவரது வீட்டில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றிருக்கின்றது.
இதன்போது இலங்கை இன்று எதிர்கொண்டுள்ள சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சவால்களை வெற்றிகொள்ள முடியுமான, செயற்திறமையான பொது சக்தியொன்றை கட்டியெழுப்ப வேண்டியதன் தேவை குறித்து முக்கியமாக அவதானம் செலுத்தப்பட்டிருக்கின்றது.
அத்துடன் இந்த கலந்துரையாடலை நாட்டில் இருக்கும் அனைத்து எதிரணிகளுடன் தொடர்ந்து மேற்கொள்வதன் தேவை குறித்து இரண்டு தரப்பினரும் இதன்போது இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திப்பில் சமூக நீதிக்கான தேசிய அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் ஊடக பேச்சாளர் சுனில் ஜயசேகர மற்றும் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ்வும் கலந்துகொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment