தனது பிள்ளைக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே பொறுப்பு : மூதூரில் காணாமற் போன சிறுமியின் தாயார் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, January 11, 2022

தனது பிள்ளைக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே பொறுப்பு : மூதூரில் காணாமற் போன சிறுமியின் தாயார் தெரிவிப்பு

காணாமல் போயுள்ள தனது பிள்ளையை கண்டுபிடித்துத் தருமாறும், பிள்ளைக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட சிறுமியின் தாயார் இன்று (11) திருகோணமலையில் ஊடக சந்திப்பினை ஏற்படுத்தி தெரிவித்தார்.

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியடிச்சோலை கிராமத்தைச் சேர்ந்த 13 வயதான சிறுமி காணாமல் போயுள்ளதாக மூதூர் பொலிஸ் நிலையத்தில் பெற்றோரினால் கடந்த வருடம் 08 ஆம் திகதியன்று முறைப்பாடு செய்யப்பட்டது. 

ஒரு மாதத்திற்கு மேலாகியும் இதுவரை அச்சிறுமி கண்டுபிடிக்கப்படாத நிலையில் சிறுமியின் தாயாரினால் ஊடக சந்திப்பொன்று இன்று (11) மதியம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இச்சந்திப்பின் போது, தரம் 8 இல் கல்வி கற்று வந்த எனது மகள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி காணாமல் போயிருந்தார். இது தொடர்பாக மூதூர் பொலிஸ் நிலையத்தில் மறுநாள் 8 ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தேன். எனினும் ஒரு மாதத்திற்கு மேலாகியும் எனது மகளை பொலிஸார் இன்னும் கண்டுபிடித்து தரவில்லை. 

இது தொடர்பாக திருகோணமலையில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்திருக்கின்றேன். எனினும் எவ்வித பலனும் இல்லை.

எனது மகள் வகுப்பில் முதலாவது பிள்ளையாகத்தான் வருவார். நல்ல கெட்டிக்காரி. அவரை பல இடங்களிலும் நாங்களும் தேடிப் பார்த்தோம் காணவில்லை. ஒவ்வொரு நாளும் செய்திகளைப் பார்க்கின்றபோது எனக்கு பயமாக இருக்கின்றது. 

எனது பிள்ளையை எப்படியாவது கண்டுபிடித்து தாருங்கள் என பொறுப்பான அனைத்து தரப்பினரிடமும் மன்றாட்டமாக கேட்டுக்
கொள்வதாகவும், எனது பிள்ளைக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

(கந்தளாய் நிருபர்)

No comments:

Post a Comment