திருமணம் செய்வதாக சிறுமி துஷ்பிரயோகம் : இளைஞன் கைது : காத்தான்குடியில் சம்பவம் - News View

Breaking

Monday, January 10, 2022

திருமணம் செய்வதாக சிறுமி துஷ்பிரயோகம் : இளைஞன் கைது : காத்தான்குடியில் சம்பவம்

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் சிறுமியொருவரை ஒரு வருட காலமாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்த சம்பவத்தில் சிறுமியின் எதிர் வீட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பிரதேசத்தினைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு ஒரு வருட காலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

மேற்படி சம்பவத்தில் சிறுமியின் எதிர் வீட்டினைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே நேற்று (09) இரவு காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியின் தாயார் சுகயீனம் காரணமாக படுக்கையில் இருந்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் சிறுமி 15 வயதாக இருக்கும் போது சிறுமியின் எதிர் வீட்டில் உள்ள இளைஞனை திருமணம் முடிப்பதற்கு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது

இந்த நிலையில், குறித்த இளைஞன் திருமண பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலத்திலிருந்து கடந்த ஒரு வருட காலமாக சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டு வந்துள்ளார். 

தற்போது சிறுமியை திருமணம் செய்ய முடியாது என இளைஞன் மறுப்பு தெரிவித்ததையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறியின் ஆலோசனைக்கமைய பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் பரிசோதகர் வை. விஜயராஜா தலைமையிலான பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(புதிய காத்தான்குடி நிருபர்)

No comments:

Post a Comment