(இராஜதுரை ஹஷான்)
முக்கிய 6 அமைச்சுக்களிலும், பிரதான அரச நிறுவனங்களின் தலைவர் பதவிகளிலும் எதிர்வரும் நாட்களில் மாற்றம் ஏற்படவுள்ளதாக ஆளும் தரப்பின் சிரேஷ்ட தலைவர் ஒருவர் குறிப்பிட்டார்.
இராஜாங்க அமைச்சுக்களில் தற்போது மாற்றம் ஏற்படுத்துவது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தவில்லை.
ஜனாதிபதி செயலணிகளின் பொறுப்புக்கள் குறித்தும் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளன.
தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள அரச நிறுவனங்களின் தலைவர் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்துவது அவசியமாகும் என அரசாங்கத்தின் முன்னிலை பிரமுகர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.
புது வருடத்தில் அரச கொள்கைத் திட்டங்களை செயற்படுத்துவதற்காக அரச செயலொழுங்கில் மாற்றம் ஏற்படுத்தவது அவசியமாகும்.
அமைச்சரவை முழுமையாக மறுசீரமைப்பதை காட்டிலும் அரச கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்துவது பொருத்தமானதாக அமையும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு முக்கிய தரப்பினர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.
நாட்டில் தற்போது தீவிரமடைந்துள்ள வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தற்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமானதாக அமையும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சியின் தலைவர்களும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முக்கிய அமைச்சர்களும் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்கள்.
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடினால் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும் என மத்திய வங்கியின் ஆளுநர் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்.
இவ்விடயம் தொடர்பில் இன்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக அறிய முடிகிறது.
திருகோணமலை எண்ணெய்த் தாங்கி வளாகத்தில் உள்ள 61 எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை பெற்றோலியமக் கூட்டுத்தாபனத்தையும், இந்தியாவின் ஐ.ஓ.சி நிறுவனத்தையும் ஒன்றிணைந்து ஸ்தாபிக்கப்படவுள்ள 'ரின்கோ பெற்றோலியம் டேர்மினல் லிமிடெட்'என்ற துணை நிறுவனம் தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரத்தை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளார்.
No comments:
Post a Comment