10 ஆண்டு காலம் குடும்பத்தோடு கூட பேசவில்லை : கூகுள் மெப்பில் சிக்கிய இத்தாலியின் மாஃபியா தலைவர் - News View

About Us

About Us

Breaking

Sunday, January 9, 2022

10 ஆண்டு காலம் குடும்பத்தோடு கூட பேசவில்லை : கூகுள் மெப்பில் சிக்கிய இத்தாலியின் மாஃபியா தலைவர்

பல ஆண்டுகளாக பல்வேறு சட்ட முகமைகளிடமிருந்து தப்பி ஓடிக் கொண்டிருந்த ஒரு இத்தாலிய மாஃபியா தலைவர், கூகுள் மேப் மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

கியாச்சினோ கம்மினோ என்கிற 61 வயதான நபர், ஸ்பெயின் நாட்டிலுள்ள கலபகர் என்கிற பகுதியில் கண்டறியப்பட்டுள்ளார். அங்குதான் அவர் மேனுவல் என்கிற பெயரில் வாழ்ந்து வந்தார்.

கூகுள் ஸ்ட்ரீட் வியூ தளத்தில் இருந்த படத்தில், கியாச்சினோ கம்மினோவைப் போல ஒருவர், சில்லறை கடை முன் தோற்றமளிப்பதாக பின் தொடர்ந்த போதுதான், அவர் மாஃபியா தலைவர் என உறுதி செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அப்படம்தான் அவரது கைதுக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது என விசாரணை அதிகாரிகள் கூறினர்.

கடந்த 2002ஆம் ஆண்டு கியாச்சினோ கம்மினோ ரோம் நகரத்தின் சிறையிலிருந்து தப்பினார். கொலை குற்றத்தில் ஈடுபட்டதற்காக, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

அவர் ஸ்டிடா என்றழைக்கப்பட்ட சிசிலியன் மாஃபியா குழுவின் உறுப்பினர், மேலும் இத்தாலியில் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த அடிதடி நபர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கியாச்சினோ கம்மினோ ஸ்பெயின் நாட்டில் பதுங்கி இருப்பதாக சிசிலிய காவல்துறை நம்பியது. ஆனால் அவர் ஒரு நபரோடு, எல் ஹர்டோ டெ மனு அல்லது மனுஸ் கார்டன் கடைக்கு வெளியே பேசிக் கொண்டிருப்பது போன்ற படம்தான் உடனடியாக விசாரனையைத் தொடங்க காரணமாக அமைந்தது.

கொசினா டி மனு என்கிற தற்போது செயல்பாட்டில் இல்லாத உணவகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில்தான் அவரது அங்க அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. அப்பக்கத்தில் கியாச்சினோ கம்மினோ ஒரு உணவு தயாரிக்கும் கலைஞர் ஆடையில் இருந்தார். அவரது தாடைப் பகுதியில் இருந்த தழும்பை வைத்து அவர்தான் தேடப்பட்டு வந்த குற்றவாளி என அடையாளம் காணப்பட்டது. அது போக, அந்த உணவகத்தின் உணவுப் பட்டியலில் சிசிலிய உணவுகள் இருந்தன.

அவர் கடந்த டிசம்பர் 17ஆம் திகதி கைது செய்யப்பட்டார், ஆனால் கடந்த புதன்கிழமைதான் பத்திரிகையில் செய்தி வெளியானது.

கைதான கியாச்சினோ கம்மினோ, "என்னை எப்படி கண்டுபிடித்தீர்கள்? நான் என் குடும்பத்தினரை கூட கடந்த 10 ஆண்டுகளாக அழைத்துப் பேசவில்லை" என காவல்துறையிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

தற்போது கியாச்சினோ கம்மினோ ஸ்பெயின் நாட்டில் காவலில் இருக்கிறார். அவர் பெப்ரவரி மாத இறுதிக்குள் இத்தாலி அழைத்து வரப்படலாம் என, இத்தாலிய காவல்துறையின் மாஃபியா பிரிவின் துணை இயக்குநர் நிகோலா அல்டியரோ ராய்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறினார்.

No comments:

Post a Comment