(நா.தனுஜா)
வெளிநாடுகளில் பணி புரியும் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் பணத்தில் கடந்த மாதத்தில் மாத்திரம் சுமார் 300 மில்லியன் டொலர் வீழ்ச்சியேற்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், நாட்டின் அந்நியச் செலாவணியில் முக்கிய பங்களிப்பை வழங்கி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர் பணவனுப்பல்களை ஊக்குவிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி வெளிநாடுகளிலிருந்து கடந்த மாதம் சுமார் 72 பில்லியன் ரூபா பணம் முறைசாரா வழிமுறைகளின் ஊடாக நாட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கின்றது. வெளிநாடுகளிலிருந்து முறைசாரா வழிகளின் ஊடாக பணம் அனுப்புபவர்களுக்கு எதிராகவும் அவர்கள் பணத்தை அனுப்புகின்ற வங்கிக் கணக்கு உரிமையாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே வெளிநாடுகளில் பணி புரியும் தொழிலாளர்கள் நாட்டிற்குப் பணத்தை அனுப்புவதற்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட முறைசார் வழிகளையே தெரிவுசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
வெளிநாடுகளில் பணி புரியும் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் டொலர்களின் அளவை அதிகரிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று சனிக்கிழமை இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அச்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, எமது நாட்டிற்கான அந்நியச் செலாவணியில் வெளிநாட்டுத் தொழிலாளர் பணவனுப்பல்கள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றது. கடந்த காலங்களைப் பொறுத்தமட்டில் வெளிநாடுகளில் பணி புரியும் தொழிலாளர்களால் வருடாந்தம் சுமார் 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.
இருப்பினும் கடந்த 6 மாத காலப்பகுதியில் வெளிநாட்டுத் தொழிலாளர் பணவனுப்பல்கள் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளன. இதில் கடந்த மாதத்தில் மாத்திரம் சுமார் 300 மில்லியன் டொலர் வீழ்ச்சியேற்பட்டிருக்கின்றது.
2020 ஆம், 2021 ஆம் ஆண்டுகளில் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்களவிலான சரிவு ஏற்பட்டமை இதற்கான பிரதான காரணமாக அமைந்திருப்பதுடன் மத்திய வங்கியினால் அமைக்கப்பட்டுள்ள விசேட குழு இதற்கான ஏனைய காரணங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது.
அதேவேளை வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்கள் பணம் (டொலர்) அனுப்புவதை ஊக்குவிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் 3 கோணங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முதலாவதாக வெளிநாடுகளில் பணி புரியும் தொழிலாளர்களால் அனுப்பப்படுகின்ற பணம் இம்மாத காலப்பகுதியில் இலங்கை ரூபாவாக மாற்றப்படும்போது ஒரு டொலருக்கான ஊக்குவிப்புத் தொகையாக 10 ரூபாவை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குப் பணம் அனுப்புவதை இலகுபடுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதுடன் இது குறித்து வங்கிகளுடனும் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டுள்ளன.
மூன்றாவதாக வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புவோர் நன்மையடையக்கூடிய வகையில் அவர்களுக்கு விசேட சலுகைகளை வழங்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஓய்வுதியத் திட்டம், காப்புறுதித் திட்டம், வங்கிக் கடன் பெறுவதை இலகுபடுத்தல் போன்றவை அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அடுத்ததாக வெளிநாடுகளிலிருந்து கடந்த மாதம் சுமார் 72 பில்லியன் ரூபா பணம் முறைசாரா வழிமுறைகளின் ஊடாக நாட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கின்றது. இது குறித்து மத்திய வங்கியினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
போதைப் பொருள் கடத்தல், வியாபாரத்தின் ஊடாக இத்தகைய பெருந்தொகைப் பணத்தை உழைக்கக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதனால், அதுபற்றியும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து முறைசாரா வழிகளின் ஊடாக பணம் அனுப்புபவர்களுக்கு எதிராகவும் அவர்கள் பணத்தை அனுப்புகின்ற வங்கிக் கணக்கு உரிமையாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆகையினால் வெளிநாடுகளில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தொழில் புரிபவர்கள், அதன் மூலம் உழைத்த பணத்தை நாட்டிற்கு அனுப்புவதற்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட முறைசார் வழிகளையே தெரிவுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment