பிரியந்த குமாரவின் கொலை இலங்கையர்களுக்கு மாத்திரமன்றி, மனித நேயமுள்ள உலகின் அனைவருக்கும் பாரிய அதிர்ச்சியாகும் - ஜனாதிபதி கோத்தபாய - News View

About Us

About Us

Breaking

Saturday, December 4, 2021

பிரியந்த குமாரவின் கொலை இலங்கையர்களுக்கு மாத்திரமன்றி, மனித நேயமுள்ள உலகின் அனைவருக்கும் பாரிய அதிர்ச்சியாகும் - ஜனாதிபதி கோத்தபாய

பாக்கிஸ்தான் கைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த இலங்கைத் தொழிலாளரான பிரியந்த குமார என்பவர் மனிதாபிமானமற்ற முறையில் கொலை செய்யப்பட்டதை எண்ணி நான் வருந்துகிறேன் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ள ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், அந்த மனிதாபிமானமற்றச் செயல் இலங்கையர்களுக்கு மாத்திரமன்றி, மனித நேயமுள்ள உலகின் அனைவருக்கும் பாரிய அதிர்ச்சியாகும்.

பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட பாக்கிஸ்தான் அரசாங்கம், இந்த மனிதாபிமானமற்ற கொலை நடைபெற்ற உடனேயே நீதியை நிலை நாட்டுவதற்காக எடுத்த நடவடிக்கைகளை, பாக்கிஸ்தானின் நீண்டகால நட்புறவைக் கொண்ட இலங்கை பாராட்டுவதோடு, இது தொடர்பாக பாக்கிஸ்தான் அரசாங்கம் எடுக்கும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றியும் இலங்கை அரசாங்கமும் நாட்டு மக்களும் பாரிய நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருக்கின்றோம்.

அதேபோன்று, பாக்கிஸ்தானில் வசிக்கின்ற ஏனைய இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பாக்கிஸ்தான் அரசாங்கத்திடம் நான் கேட்டுக் கொள்கின்றேன்.

இச்செய்தியைக் கேள்விப்பட்டவுடன் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கும், பாக்கிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கும் நான் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கமைய அவர்கள் தற்போது செயற்பட்டு வருகின்றனர்.

எந்த அடிப்படையில் வந்தாலும், அடிப்படைவாதச் செயற்பாடுகள் சமூகத்தைப் பாரியளவில் பாதிக்கின்றன. அதனால், அடிப்படைவாதத்துக்கு எதிராக முழு உலகமும் ஒரே நோக்கத்துடன் நின்று செயற்பட வேண்டுமென்பதை இவ்வாறான விடயங்கள் உறுதி செய்கின்றன.

இந்த துரதிர்ஷடவசமான செய்தியினால் பாரிய அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள பிரியந்த குமாரவின் குடும்பத்தினருடன் நானும் அரசாங்கமும், இலங்கை நாட்டின் அனைத்து மக்களும் இருப்பதாக நினைவூட்டுகிறேன்.

No comments:

Post a Comment