குறிஞ்சாக்கேணி பாலத்தை விட மோசமான நிலைப்பாட்டிலேயே கிண்ணியா வைத்தியசாலை உள்ளது : தனது மாவட்டத்திலுள்ள பல வைத்தியசாலைகள் தொடர்பிலும் குரல் எழுப்பினார் இம்ரான் எம்.பி - News View

About Us

About Us

Breaking

Saturday, December 4, 2021

குறிஞ்சாக்கேணி பாலத்தை விட மோசமான நிலைப்பாட்டிலேயே கிண்ணியா வைத்தியசாலை உள்ளது : தனது மாவட்டத்திலுள்ள பல வைத்தியசாலைகள் தொடர்பிலும் குரல் எழுப்பினார் இம்ரான் எம்.பி

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தை விட மோசமான நிலைப்பாட்டிலேயே கிண்ணியா வைத்தியசாலை உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை (30) இடம்பெற்ற சுகாதார அமைச்சின் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தை விட மோசமான நிலைப்பாட்டிலேயே கிண்ணியா வைத்தியசாலை உள்ளது. கிண்ணியா வைத்தியசாலையை ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் உபயோகிக்கின்றனர்.

இங்கு ஒரு நாளில் 550 வெளிநோயாளர்கள் சிகிசிச்சை பெறுகின்றனர். 100 பேர் அனுமதிக்கப்படுகின்றனர். மாதம் 160 பிரசவங்கள் நிகழ்கிறது.

திருகோணமலை வைத்தியசாலைகளிலுள்ள வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெரும் நோயாளர்களின் எண்ணிக்கையை பார்க்கும்போது (2015 தரவுகளுக்கமைய )

திருகோணமலை வைத்தியசாலையில் 134301 நோயாளிகளும் , தரம் A யிலுள்ள கந்தளாய் வைத்தியசாலையில் 129627 நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர். ஆனால்  கிண்ணியா வைத்தியசாலையில் 159043 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.

இதன் மூலம் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள வைத்தியசாலையை விட கிண்ணியா வைத்தியசாலையில் அதிக நோயாளர்கள் சிகிசிச்சை பெறுகின்றனர் என்பது தெளிவாகிறது.

ஆனால் இந்த வைத்தியசாலையின் ஆளணி மற்றும் பௌதீக வளங்களை எடுத்து நோக்கினால் தள வைத்தியசாலைக்குரிய வசதிகளும் இங்கில்லை.

இங்கு 317 ஆளணியின் தேவை இருந்தும் 211 பேரே கடமையாற்றுகின்றனர். இங்கு சத்திர சிகிசிச்சை நிபுணர் இன்மையால் கடந்த 4 மாதங்களாக சாத்திர சிகிசிச்சை எதுவும் நடைபெறவில்லை. நோயாளிகள் சிறிய சத்திர சிகிசிச்சைக்கும் திருகோணமலை வைத்தியசாலைக்கே அனுப்பப்படுகின்றனர்.

பிரசவ வாட்டில் கட்டிலை இருவர் பயன்படுத்தும் நிலையும் தரையில் கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார் உரங்கும் நிலையும் காணப்படுகிறது.

சுனாமியால் முற்றாக அழிக்கப்பட்ட பின் இந்த வைத்தியசாலை இத்தாலி அரசின் நிதி உதவி மூலம் 10 வருட கால உத்தரவாதத்துடன் நிர்மாணிக்கப்பட்டு 17 வருடங்கள் சென்ற பின்பும் இந்த வைத்தியசாலை எந்தவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் பிரதேச வைத்தியசாலையை விட மோசமான நிலையில் இயங்கி வருகிறது. 

திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை வைத்தியசாலையிலும் கந்தளாய் வைத்தியசாலையிலுமே ICU கட்டில்கள் காணப்படுகின்றன. அதில் திருகோணமலை வைத்தியசாலையில் 6 ICU கட்டில்கள் மட்டுமே உள்ளன. கந்தளாய் வைத்தியசாலையில் 3 ICU கட்டில்கள் மட்டுமே உள்ளன. நான்கு இலட்சம் மக்கள் வாழும் மாவட்டத்தில் ICU கட்டில்கள் போதுமானதா?

திருகோணமலையில் எந்த வைத்தியசாலையிலும் விசேட பிரிவுகள் இல்லை. இதனால் சிறுநீரக, இருதய மற்றும் புற்றுநோயாளிகள் மட்டகளப்பு, அனுராதபுரம் போன்ற வைத்தியசாலைகளுக்கே சிகிசிச்சைகளுக்காக செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. 

இதனால் பதவிசிரிபுராவில் சிறுநீரக பிரிவும், கிண்ணியா மற்றும் மூதூர் வைத்தியசாலைகளில் இருதய நோய் பிரிவும், திருகோணமலையில் கண் நோய் பிரிவும், கந்தளாயில் புற்று நோய் பிரிவும் அமைக்கப்படல் வேண்டும்.

அத்துடன் கிண்ணியா மூதூர் வைத்தியசாலைகள் மத்திய அரசின் கீழ் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல வருட காலமாக முன்வைக்கப்படுகிறது. அவ்வாறு இந்த வைத்தியசாலைகள் மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்டால் இங்குள்ள பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வு கிடைக்கும். ஆகவே இது தொடர்பாகவும் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன் தோப்பூர், ஈச்சளம்பெற்று, புல்மோட்டை, பதவிசிறிபுர, கோமரங்கடவல வைத்தியசாலைகளும் தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை அப்பகுதி மக்களால் முன்வைக்கப்படுகிறது. இதையும் அமைச்சர் கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment