இலங்கையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மத்தியில் மேலும் அச்சத்தை விதைப்பதன் ஊடாக தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது - கூட்டாக வலியுறுத்தியுள்ள சிவில் சமூக, மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 4, 2021

இலங்கையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மத்தியில் மேலும் அச்சத்தை விதைப்பதன் ஊடாக தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது - கூட்டாக வலியுறுத்தியுள்ள சிவில் சமூக, மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள்

(நா.தனுஜா)

பயங்கரவாத தடைச் சட்டத்தில் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்திருப்பதாக அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பெரும்பாலான திருத்தங்கள் ஏற்கனவே அச்சட்டத்தில் உள்வாங்கப்பட்டிருக்கும் அதேவேளை, மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கக் கூடிய சரத்துக்கள் குறித்து எவ்வித அவதானமும் செலுத்தப்படவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதுடன் அதன் பிரயோகத்தை இடைநிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 13 சிவில் சமூக அமைப்புக்களும், 47 மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் இணைந்து கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

ஏற்கனவே அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மத்தியில் மேலும் அச்சத்தை விதைப்பதன் ஊடாக தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. முரண்பாடுகள் மற்றும் வன்முறைகளுக்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து, அதனைக் களைவதற்கு நடவடிக்கை எடுப்பதன் ஊடாகவே அரசாங்கம் எதிர்பார்ப்பது போன்று தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் இடையில் சமநிலையை அடைந்துகொள்ள முடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்காக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவிற்கும் இலங்கையின் ஒருமித்த கருத்துக்களுக்கான கூட்டிணைவில் அங்கம் வகிக்கும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திபொன்று அண்மையில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தில் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ள திருத்தங்கள் தொடர்பில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்ததாக இலங்கையின் ஒருமித்த கருத்துக்களுக்கான கூட்டிணைவினால் கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமாத்திரமன்றி அமைச்சரால் விளக்கமளிக்கப்பட்ட திருத்தங்களும் அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் பயங்கரவாத தடைச் சட்டத்தில் அரசாங்கம் செய்வதற்கு எதிர்பார்த்துள்ள திருத்தங்கள் தொடர்பில் தமது நிலைப்பாட்டை அறிவிக்கும் வகையில் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், நிமல்கா பெர்னாண்டோ, ரணிதா ஞானராஜா, கலாநிதி சகுந்தலா கதிர்காமர், பிரிட்டோ பெர்னாண்டோ, மைத்ரேயி ராஜசிங்கம் உள்ளடங்கலாக 47 தனி நபர்களும் சிறுபான்மையினத்தவரின் கூட்டிணைவு, மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான நிலையம், நீதி மற்றும் மாற்றத்திற்கான நிலையம், காணாமல் போனோர் குடும்ப ஒன்றியம், சட்ட மற்றும் சமூக நிதியம், தமிழ் சிவில் சமூகப் பேரவை உள்ளடங்கலாக 13 சிவில் சமூக அமைப்புக்களும் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அக்கூட்டறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, அரசாங்கம் கடந்த ஜுன் மாதம் பயங்கரவாத தடைச் சட்டத்தைத் திருத்தியமைக்கப் போவதாக அறிவித்ததுடன் அதற்கென அமைச்சரவை உப குழுவொன்றையும் நியமித்தது. அந்த அமைச்சரவை உப குழுவின் கீழ் இயங்குகின்ற பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தலைமையிலான தொழில்நுட்பக் குழு பயங்கரவாத தடைச் சட்டத்திருத்தம் தொடர்பான அதன் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை கடந்த நவம்பர் மாதம் அமைச்சரவை உப குழுவிடம் சமர்ப்பித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

பல தசாப்த காலமாக பயங்கரவாத தடைச் சட்டமானது தமிழ்ச் சமூகத்திற்கு எதிரான ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதுடன் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களின் பின்னர் அச்சட்டம் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றது. அதுமாத்திரமன்றி இச்சட்டமானது ஜே.வி.பி கலவரம் இடம்பெற்ற காலப்பகுதியில் சிங்கள சமூகத்திற்கு எதிராகவும் பிரயோகிக்கப்பட்டது.

ஆகவே பயங்கரவாத தடைச் சட்டத்துடன் தொடர்புடைய எந்தவொரு விடயங்களைக் கையாளும்போதும் கடந்த காலங்களில் அச்சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி மற்றும் இழப்பீடு என்பன வழங்கப்படுவதை உறுதி செய்தல் குறித்தும் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

பயங்கரவாத தடைச் சட்டத்தில் மேற்கொள்வதற்கு எதிர்பார்த்திருக்கும் திருத்தங்கள் குறித்த தகவல்களை அரசாங்கம் இதுவரையில் பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்ளாத நிலையில், கடந்த நவம்பர் மாதம் 29 ஆம் திகதி இலங்கையின் ஒருமித்த கருத்துக்களுக்கான கூட்டிணைவினால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் அரசாங்கம் அக்கூட்டிணைவின் பிரதிநிதிகளுடன் பகிர்ந்துகொண்ட திருத்தங்கள் உள்வாங்கப்பட்டிருந்தது.

அதனை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பெரும்பாலான திருத்தங்கள் ஏற்கனவே பயங்கரவாத தடைச் சட்டத்தில் உள்வாங்கப்பட்டிருக்கும் அதேவேளை, மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கக்கூடிய சரத்துக்கள் குறித்து எவ்வித அவதானமும் செலுத்தப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தும் அதேவேளை, அதன் பிரயோகத்தை இடைநிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் கோருகின்றோம்.

பயங்கரவாதத்தைக் கையாள்வதற்காக உருவாக்கப்படும் எந்தவொரு சட்டமும் சர்வதேச மனித உரிமைகள்சார் தரநியமங்களைப் பூர்த்தி செய்பவையாக அமைய வேண்டும் என்பதை மீள நினைவுறுத்த விரும்புகின்றோம்.

அதேவேளை பயங்கரவாத தடைச் சட்டமானது சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சமவாயச் சட்டம் உள்ளடங்கலாக சர்வதேச பிரகடனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மனித உரிமைகள்சார் நியமங்களுக்கு அமைவானதாகவும் நாட்டின் அரசியலமைப்பின் விதிவிதானங்களுக்கு ஏற்புடையதாகவும் காணப்படவில்லை.

அரசாங்கத்தினால் இலங்கையின் ஒருமித்த கருத்துக்களுக்கான கூட்டிணைவிற்குப் பகிரப்பட்டிருக்கும் திருத்த முன்மொழிவுகள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படைக் குறைபாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தத்தவறியிருக்கின்றன.

அதேவேளை பயங்கரவாத தடைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்காக உருவாக்கப்பட்ட குழுக்கள் போதிய வெளிப்படைத் தன்மையுடன் செயற்படவில்லை என்பதுடன் அச்சட்டம் சார்ந்த விடயங்கள் மற்றும் அதன் பிரயோகத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினர் தொடர்பில் செயலாற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்காமல் அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

எனவே பயங்கரவாத தடைச் சட்டத் திருத்தம் குறித்து போதிய வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் அதேவேளை, மேற்கொள்ளவிருக்கும் திருத்தங்கள் பற்றி மக்களைத் தெளிவூட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும் ஏற்கனவே அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மத்தியில் மேலும் அச்சத்தை விதைப்பதன் ஊடாக தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது. முரண்பாடுகள் மற்றும் வன்முறைகளுக்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து, அதனைக் களைவதற்கு நடவடிக்கை எடுப்பதன் ஊடாகவே அரசாங்கம் எதிர்பார்ப்பது போன்று தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் இடையில் சமநிலையை அடைந்துகொள்ள முடியும்.

மாறாக தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துதல் என்ற போர்வையில் மக்களின் சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமாயின், அவை நாட்டின் ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் சீர்குலைப்பதுடன் அனைத்து சமூகங்களும் பாதுகாப்பின்மையை உணர்வதற்கும் வழிவகுக்கும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment