(நா.தனுஜா)
இலங்கையில் நீதியையும் மனித உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கான ஆதரவை அமெரிக்கா எப்போதும் வழங்கியிருக்கின்றது. பிரிக்கப்படாத இலங்கைக்குள் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு' உள்ளடங்கலாக போர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் பல வருட காலமாக பதில் வழங்கப்படாமலிருக்கும் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதன் ஊடாகவே அவற்றை மேலும் வலுப்படுத்த முடியும்.
எனவே இலங்கையில் நிலைபேறான அரசியல் தீர்விற்கான அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அமெரிக்காவின் கொள்கை அமைய வேண்டும் என்று வெளிவிவகாரங்கள் தொடர்பான அமெரிக்கப் பிரதிநிதிகள் குழு இராஜாங்க செயலாளர் அன்ரனி ஜே.பிளின்கெனிடம் வலியுறுத்தியுள்ளனர்.
இவ்விடயத்தை வலியுறுத்தி வெளிவிவகாரங்கள் தொடர்பான அமெரிக்கப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் கிரெகரி டபிள்யூ.மீக்ஸ் மற்றும் உறுப்பினர் மைக்கேல் டி.மெக்கோல் ஆகியோர் கையெழுத்திட்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி ஜே.பிளின்கெனிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்பு அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் இந்திய - பசுபிக் பிராந்தியத்தில் தேசிய பாதுகாப்பு குறித்த அக்கறைகளைப் பொறுத்தமட்டில் மிகவும் முக்கியமானதாகும்.
நாட்டின் நீண்ட கால உறுதிப்பாட்டில் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவாறான நிதி நெருக்கடி முதல் இன்னமும் தீர்க்கப்படாத இன ரீதியான முரண்பாடுகள் வரையில் இலங்கை பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது.
இலங்கையில் சுமார் 30 வருட காலமாக இடம்பெற்ற போர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதிலிருந்து அந்தப் போருக்கு அடிப்படையாக அமைந்த காரணங்களை ஆராய்ந்து தீர்வுகளை வழங்குதல் உள்ளடங்கலாக நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் ஆகிய விடயங்களில் இலங்கைக்கு ஆதரவு வழங்கும் வகையில் அமெரிக்காவின் கொள்கை அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டை எமது குழு வெளிப்படுத்தி வந்திருக்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் நிலைபேறான அரசியல் தீர்விற்கான அவசியத்தை வலியுறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மீது மீண்டும் கவனத்தைக் குவிக்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திடம் வலியுறுத்துகின்றோம்.
எனவே அத்தகையதொரு தீர்வை அடைந்துகொள்ளும் நோக்கில் தமிழ், முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக எதிர்க்கட்சிகளுடன் அரசாங்கம் முன்னெடுத்துவரும் பேச்சுவார்த்தைகளுக்கு அவசியமான ஆதரவை வழங்குமாறும் இராஜாங்கத் திணைக்களத்திடம் கேட்டுக் கொள்கின்றோம்.
இது குறித்த நகர்வுகளுக்கு இலங்கை மக்கள் தலைமை தாங்கும் அதேவேளை, அந்த முயற்சிகளுக்கு அவசியமான ஆதரவை முழுமையாக வழங்குவதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக இராஜாங்கத் திணைக்களம் அறிவிக்க வேண்டும்.
எது எவ்வாறாயினும், மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் இறுதியில் தமிழ், முஸ்லிம்கள் உள்ளடங்கலாக இலங்கையில் வாழும் அனைத்துப் பிரஜைகளினதும் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைய வேண்டியது அவசியமாகும் என்று அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment