(நா.தனுஜா)
கவிஞர் அஹ்னாப் ஜஸீம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை தமக்கு மிகுந்த ஆறுதலளிப்பதாகத் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, நீதிமன்ற மேற்பார்வையின்றி ஒருவரைத் தடுத்து வைப்பதற்கான வாய்ப்பை வழங்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதை இனியும் தாமதப்படுத்தக் கூடாது என்று இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை அஹ்னாப் ஜஸீம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமையானது அனைத்துப் பிரஜைகளினதும் உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் நியாயமான முறையில் வழக்கு விசாரணைகள் இடம்பெறுவதையும் உறுதிப்படுத்துவதில் அடையப்பட்டுள்ள முன்னேற்றமாகும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
'நவரசம்' என்ற கவிதைத் தொகுப்பை எழுதியமைக்காகக் கைது செய்யப்பட்டு, பின்னர் அடிப்படைவாதத்தைப் போதித்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்ட இளம் கவிஞரான அஹ்னாப் ஜஸீமை பிணையில் விடுவிப்பதற்கு புத்தளம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் 24 மணி நேரத்திற்கும் அதிகமான காலம் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை விடுதலை செய்யப்பட்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரை விடுதலை செய்யுமாறு கடந்த காலங்களில் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த சர்வதேச மன்னிப்புச் சபை, அவரது விடுதலையை அடுத்து அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதியிலிருந்து 19 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அஹ்னாப் ஜஸீம் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரிதும் ஆறுதலளிக்கின்றன.
அஹ்னாப் ஜஸீம் அவரால் எழுதப்பட்ட ஓர் கவிதைத் தொகுப்பிற்காகக் கைது செய்யப்பட்டதுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் சட்ட உதவியை நாடுவதற்கும் அவரது குடும்பத்தினருடன் பேசுவதற்கும் வாய்ப்பளிக்கப்படாமை உள்ளடங்கலாக நியாயமான விசாரணைகள் அவருக்கு மறுக்கப்பட்டன.
அவர் மிக மோசமான முறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் மாத்திரமன்றி, விசாரணைகளின்போது வற்புறுத்தலின்பேரில் அவரிடமிருந்து பொய்யான வாக்குமூலத்தைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
நீதிமன்ற மேற்பார்வையின்றி ஒருவரைத் தடுத்து வைப்பதற்கும் அவரை முறையற்ற விதத்தில் நடாத்துவதற்குமான வாய்ப்பை பயங்கரவாதத் தடைச் சட்டம் வழங்குகின்றது. ஆகையினாலேயே தொடர்ந்து தாமதிக்காமல் அச்சட்டத்தை உடனடியாக நீக்குமாறு நாம் வலியுறுத்துகின்றோம். அதுவரையில் அச்சட்டத்தின் பயன்பாட்டை இடைநிறுத்த வேண்டும்.
அதுமாத்திரமன்றி தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக மீளாய்வு செய்வதுடன் அவர்களது பிணைக் கோரிக்கை நியாயமான முறையில் ஆராயப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும்.
அத்தோடு சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்படாத குற்றங்களுக்காகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை அப்பதிவில் வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை அஹ்னாப் ஜஸீமின் விடுதலை குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் நெட் ப்ரைஸ் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது,
'இலங்கையைச் சேர்ந்த கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜஸீமின் விடுதலையை நாம் வரவேற்கின்றோம். கருத்து வெளிப்பாடுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் நிமித்தம் கைது செய்யப்பட்ட அஹ்னாப் ஜஸீம் 500 நாட்களுக்கும் அதிகமான காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்' என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அஹ்னாப் ஜஸீம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமையானது அனைத்துப் பிரஜைகளினதும் உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் நியாயமான முறையில் வழக்கு விசாரணைகள் இடம்பெறுவதையும் உறுதிப்படுத்துவதில் அடையப்பட்டுள்ள முன்னேற்றமாகும் என்று இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரக விவகாரங்களுக்குப் பொறுப்பான பதில் தூதுவர் மார்டின் கெலி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment