அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைவடைந்துள்ளது : தவறான தீர்மானங்களினால் பொருளாதார, சமூக மட்டத்தில் பெரும் பாதிப்பு - சந்திம வீரக்கொடி - News View

About Us

About Us

Breaking

Saturday, December 18, 2021

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைவடைந்துள்ளது : தவறான தீர்மானங்களினால் பொருளாதார, சமூக மட்டத்தில் பெரும் பாதிப்பு - சந்திம வீரக்கொடி

(இராஜதுரை ஹஷான்)

இராணுவத்தினரால் யுத்தம் புரிய முடியுமே தவிர அரச நிர்வாகத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல முடியாது. அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைவடைந்துள்ளது. மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு காணாவிடின் இனிவரும் காலங்களில் மக்கள் பிரநிதிகளினால் வீதிக்கிறங்க முடியாத நிலை ஏற்படும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமுன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

காலி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு மக்களின் நம்பிக்கை பிரதான காரணியாக உள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மீது மக்கள் கொண்ட நம்பிக்கையே 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது.

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை தற்போது வலுவிழந்துள்ளது. அரசாங்கத்தின் ஒரு சில தவறான தீர்மானங்களினால் மக்கள் பொருளாதார ரீதியிலும், சமூக மட்டத்திலும் பெரும் பாதிப்புக்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

இராணுவத்தினரால் சிறந்த முறையில் யுத்தம் புரிய முடியுமே தவிர சிறந்த முறையில் அரச நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாது. அனைத்து தரப்பிலும் இராணுவத்தினரது செயற்பாடுகள் காணப்பட்டால் அதன் பெறுபேறு பாரிய விளைவுகளை தோற்றுவிக்கும்.

நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய பாராளுமன்றத்தின் அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் பாராளுமன்ற அதிகாரம் குறித்து கவனம் செலுத்துவதை காட்டிலும், மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் அவதானம் செலுத்துவது அவசியமாகும்.

சேதனப் பசளை திட்டம் சிறந்ததாக காணப்பட்டாலும் அதனை செயற்படுத்த முறையான திட்டங்கள் வகுக்கப்படவில்லை. இரசாயன உரம் தடை செய்யப்பட்டதன் விளைவை முழு நாடும் தற்போது எதிர்க்கொண்டுள்ளது.

உற்பத்திகள் வீழ்ச்சியடைந்துள்ளதால் உணவு பாதுகாப்பின் நிலை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. நாட்டில் எதிர்வரும் காலங்களில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்வுகூறியுள்ளார்கள்.

மக்கள் எதிர்க்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டங்களை அரசாங்கம் விரைவாக செயற்படுத்த வேண்டும். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்படாவிடின் மக்கள் பிரதிநிதிகளினால் எதிர்வரும் காலங்களில் வீதிக்கிறங்கி செல்ல முடியாத நிலை ஏற்படும் என்றார்.

No comments:

Post a Comment