துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் : விசாரணைகளுக்கு பூரண நீதியரசர்கள் அமர்வு வேண்டும் - ஹிருணிகா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் உயர் நீதிமன்றில் கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Saturday, December 18, 2021

துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் : விசாரணைகளுக்கு பூரண நீதியரசர்கள் அமர்வு வேண்டும் - ஹிருணிகா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் உயர் நீதிமன்றில் கோரிக்கை

(எம்.எப்.எம்.பஸீர்)

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பின் சட்டபூர்வ தன்மையை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர, அவரது தாயார் சுமனா பிரேமசந்திர ஆகியோர் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைகளுக்கு பூரண நீதியரசர்கள் அமர்வொன்று கோரப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 132 (3) ஆம் உறுப்புரிமைக்கு அமைய, 5 அல்லது அதற்கும் அதிகமான நீதியர்சர்களைக் கொண்ட நீதியர்சர்கள் குழாமை இவ்வழக்கு விசாரணைக்காக நியமிக்க வேண்டும் என ஹிருணிகா பிரேமசந்திர சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நேற்று (17) உயர் நீதிமன்றில் கோரினார்.

ஹிருணிகவின் தாயாரான சுமனா பிரேமசந்திர சார்பில் இதன்போது மன்றில் ஆஜரான சட்டத்தரணி எராஜ் டி சில்வாவும் இதனை வலியுறுத்தினார்.

இந்த மனுக்கள் நேற்று உயர் நீதிமன்ற நீதியரசர்களான காமினி அமரசேகர, ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய நீதியரசர்களை உள்லடகீய குழு முன்னிலையில் பரிசீலனைக்கு வந்திருந்தது.

இதன்போது பூரண நீதியரசர்கள் குழாம் தொடர்பிலான இந்த கோரிக்கையை நகர்த்தல் பத்திரம் மூலம் முன்வைக்குமாறு மனுதாரர் தரப்புக்கு நீதியரசர்கள் அறிவுறுத்தினர்.

பூரண நீதியர்சர்கள் அமர்வு கோரிக்கை பிரதம நீதியர்சருக்கு அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதற்காக மனுவானது எதிர்வரும் மார்ச் 3 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

அரசியலமைப்பின் 10, 11, 12 மற்றும் 12(1) ஆகிய பிரிவுகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள தங்களின் அடிப்படை உரிமைகள், மீறப்பட்டுள்ளதாக அறிவிக்கக் கோரி, ஹிருனிகா பிரேமசந்திர, அவரது தாயார் இம்மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களின் இறுதித் தீர்ப்பு வரும் வரை துமிந்த சில்வா நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என மனுதாரர் இம்மனுவூடாக கோரியுள்ளார்கள்.

துமிந்த சில்வாவின் ஜனாதிபதி பொது மன்னிப்பு சட்டத்தில் செல்லுபடியற்றது என அறிவிக்குமாறும் மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

அத்துடன் அரசியலமைப்பின் 34 வது உறுப்பிரையின் கீழ் வழங்கப்பட்ட எந்தவொரு மன்னிப்பும் அரசியலமைப்பின் 34 (1) ஆம் உறுப்பிரையில் கூறப்பட்டுள்ளதன் பிரகாரம், அத்தகைய மன்னிப்பை வழங்குவதற்கான அவசியத்தை கவனமாக பகுப்பாய்வு செய்த பின்னரே வழங்கபப்டல் வேண்டும் என்று மனுதாரர் குறித்த மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பு வழங்குவதற்கு முன், 34 (1) உறுப்புரையின் படி, நீதிபதிகளிடமிருந்து ஒரு அறிக்கை பெற்று நீதி அமைச்சர் ஜனாதிபதிக்கு பரிந்துரையை சமர்ப்பிக்க வேண்டும் எனும் சித்தார்ந்தம் இடம்பெறவில்லை என மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் அரசியலமைப்பின் 34 (1) ஆம் உறுப்புரையின் கீழ் மன்னிப்பு வழங்க துமிந்த சில்வா தேர்ந்தெடுக்கப்பட்டதன் அடிப்படையை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துமாறு கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்துக்கும் விளக்கம் அளிக்கப்படவில்லை என அம்மனுக்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாளொன்றில் படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் திகதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா மற்றும் இருவர் மேல் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்த விஷேட மேன்முறையீட்டு மனுக்களை நிராகரிக்க அப்போதைய பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் ஏகமனதாக தீர்மானித்தது. இவ்வாறான நிலையிலேயே துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கடந்த ஜனவரி 24 ஆம் திகதி மன்னிப்பளித்தார்.

அதனை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆஜராவதுடன் சுமனா பிரேமச்சந்திர சார்பில் சட்டத்தரணி திமுத்து குருப்புஆராச்சியின் அறிவுறுத்தலின் பேரில் தமிந்த விஜேரத்ன மற்றும் சுந்தரமூர்த்தி ஜனகன் ஆகியோருடன் சட்டத்தரணி எராஜ் டி சில்வா ஆஜராகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment