'ஒமிக்ரோன்' தொற்றுக்குள்ளான பெண்ணின் குடும்பத்தினர் எவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை : எவ்வித தடுப்பூசியையும் பெறாத இந்த தம்பதிகள் எவ்வாறு வெளிநாடு சென்றனர்? - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Saturday, December 4, 2021

'ஒமிக்ரோன்' தொற்றுக்குள்ளான பெண்ணின் குடும்பத்தினர் எவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை : எவ்வித தடுப்பூசியையும் பெறாத இந்த தம்பதிகள் எவ்வாறு வெளிநாடு சென்றனர்? - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

(எம்.மனோசித்ரா)

நைஜீரியாவிலிருந்து வருகை தந்து 'ஒமிக்ரோன்' தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள பெண் தொடர்பில் எவ்வித தகவல்களும் பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக குறித்த பெண் மற்றும் அவரது கணவன் உள்ளிட்ட குடும்ப அங்கத்தவர்கள் எவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

அத்தோடு எவ்வித தடுப்பூசியையும் பெறாத இந்த தம்பதிகள் எவ்வாறு வெளிநாடு சென்றனர்? மனைவிக்கு தொற்றுறுதி செய்யப்பட்ட நிலையில் எவ்வித தனிமைப்படுத்தலும் இன்றி கணவன் எவ்வாறு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்றும் உபுல் ரோஹண கேள்வியெழுப்பினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'ஒமிக்ரோன்' தொற்றுக்கு உள்ளான பெண் குறித்து நேரடியாக பொதுமக்களுடன் தொடர்பு கொண்டு பணியாற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்படவில்லை. எவ்வாறிருப்பினும் இவ்வாறு தொற்றுக்குள்ளானவர் என்று சந்தேகிக்கப்படுகின்ற பெண் மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மகாவௌ சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மாரவில பொது சுகாதார பரிசோதகருடைய பிரிவிற்குள் உள்ளடங்கும் வீட்டிலுள்ளவர்களின் பி.சி.ஆர். மாதிரிகளை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் அறிவிக்கப்பட்டதையடுத்தே அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும் 'ஒமிக்ரோன்' தொற்றுறுதி செய்யப்பட்டுள்ள பெண் நவம்பர் 24 ஆம் திகதி மாநாடொன்றில் கலந்து கொண்டு அவரது கணவருடனேயே நாட்டுக்கு வருகை தந்துள்ளார். இவர்கள் இருவரும் எவ்வித தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாமையின் காரணமாகவே விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த பெண்ணுக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டதால் லுனாவ கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் வீட்டிற்குச் சென்றுள்ளார். இங்கு முக்கியமானது இந்த பெண் தொற்றுறுதி செய்யப்பட்டவர் என்பதை பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.

அதேபோன்று இவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்து, வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்துள்ளார் என்பதையும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. அதன் காரணமாக குறித்த பெண்ணையோ அல்லது அவரது வீட்டிலுள்ள ஏனைய நபர்களையோ முறையாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தவில்லை.

விமான நிலைய பி.சி.ஆர். அறிக்கை தொடர்பில் எவ்வித அறிவித்தலையும் இவர்கள் பிதேச பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கவில்லை.

எவ்வாறிருப்பினும் தற்போது நாட்டிலுள்ள சட்ட விதிமுறைகளுக்கமைய குறித்த பெண் மற்றும் அவரது கணவர் 7 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பின்னர், பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொண்டு அதன் அறிக்கையை சமர்ப்பிப்பது அத்தியாவசியமானதாகும்.

மனைவிக்கு தொற்றுறுதி செய்யப்பட்ட நிலையில், அவருடன் வந்த கனவர் எவ்வித தனிமைப்படுத்தலுமின்றி எவ்வாறு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பது தொடர்பில் எமக்கு பிரச்சினை காணப்படுகிறது.

அது மாத்திரமின்றி எவ்வித தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளாத இந்த தம்பதி எவ்வாறு வெளிநாடு சென்றனர்?, தொற்றுறுதி செய்யப்பட்டமை தொடர்பில் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அறிவிக்காதது ஏன்? என்ற கேள்விகள் எமக்கும் காணப்படுகிறது.

அத்தோடு தற்போது விமான நிலையத்தில் பின்பற்றப்படும் விதிமுறைகளுக்கமைய வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பெறுமளவானோர் எவ்வித அறிவித்தலும் இன்றி விமான நிலையத்திலிருந்து வெளியேறக்கூடிய வாய்ப்புக்களே காணப்படுகின்றன.

குறிப்பாக அதிகாலை 2 மணியளவில் வரும் சில விமானங்களில் வருகை தருபவர்கள் பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை இன்றியே வருகின்றனர். இது அபாயம் மிக்க நடைமுறையாகும் என்றார்.

No comments:

Post a Comment