கிழக்கு பாலர் பாடசாலை பணியகத்தில் முஸ்லிம்களுக்கு கதவடைப்பு ! தமிழில் பணிபுரிய முடியாத தவிசாளரும், பொது முகாமையாளரும் ! அரசு ஆதரவு எம்.பிக்கள் அனுசரணையில் இந்நடவடிக்கை ! இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Monday, December 6, 2021

கிழக்கு பாலர் பாடசாலை பணியகத்தில் முஸ்லிம்களுக்கு கதவடைப்பு ! தமிழில் பணிபுரிய முடியாத தவிசாளரும், பொது முகாமையாளரும் ! அரசு ஆதரவு எம்.பிக்கள் அனுசரணையில் இந்நடவடிக்கை ! இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தில் முஸ்லிம் பணிப்பளார்களுக்கு கதவடைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழில் பணிபுரிய முடியாத தவிசாளரும், பொது முகாமையாளரும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.பிக்கள் அனுமதி வழங்கியுள்ளதாவும் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் மெலும் தெரிவித்துள்ளதாவது, கிழக்கு மாகாணத்தில் 75 வீதத்திற்கும் மேல் தமிழ் பேசும் மாணவர்களைக் கொண்ட பாலர் பாடசாலைகள் இயங்குகின்றன. இந்தப் பாடசாலைகளை முகாமை செய்யும் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகம் மட்டக்களப்பில் இயங்குகின்றது. இந்தப் பணியகத்திற்கு தமிழில் பணிபுரிய முடியாத தவிசாளரும், பொது முகாமையாளரும் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பாலர் பாடசாலை பணியகத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்களும், பாலர் பாடசாலை ஆசிரியர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இது குறித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போதும் அவர்கள் எவ்வித கவனமும் செலுத்தவில்லை எனவும் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர்கள் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

அதேபோல கிழக்கு மாகாணத்தில் 40 வீதத்திற்கு மேல் முஸ்லிம் மாணவர்களைக் கொண்ட பாலர் பாடசாலைகள் இயங்குகின்ற போதிலும் இந்தப் பாலர் பணியகத்தின் பணிப்பாளர் சபையில் முஸ்லிம்கள் எவரும் நியமிக்கப்படவில்லை எனவும் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த எமது நல்லாட்சி காலத்தில் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியக தவிசாளர்களாக அடுத்தடுத்து அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இரு முஸ்லிம்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதேபோல பணிப்பாளர் சபையிலும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

எனினும், இந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணிப்பாளர் சபையில் முஸ்லிம்கள் எவருமில்லை.

தற்போது அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவு வழங்குகின்ற போதிலும் அவர்கள் இந்தப் பணிப்பாளர் சபையில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உள்வாங்குவதில் விருப்பமின்றி செயற்படுவதாக அம்பாறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர்கள் குற்றச்சாட்டுத் தெரிவிக்கின்றனர்.

கிழக்கிலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் மக்களின் உரிமை என்ற கோஷத்தை முன்வைத்தே தேர்தல் பிரச்சாரம் செய்தோம். அதனால்தான் மக்கள் எங்களுக்கு வாக்களித்தார்கள். ஆனால் இன்று மக்களது உரிமைகள் பேசுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இருக்கின்றோம்.

தற்போது அரசோடு இணைந்திருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களால் கிழக்கில் பெரும்பான்மையாக வாழும் தமிழ்ப் பேசும் மக்களின் உரிமையை இந்தச் சின்ன விடயத்திலாவது உறுதிப்படுத்த முடியவில்லை என்றால். இவர்களால் எப்படி ஏனைய உரிமைகளைப் பெற்றுத்தர முடியும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தில் முஸ்லிம்களுக்கு கதவடைப்புச் செய்யப்பட்டதற்கும், தமிழில் பணிபுரிய முடியாத தவிசாளரும், பொது முகாமையாளரும் நியமிக்கப்பட்டதற்கும் கிழக்கு மாகாண அரசு ஆதரவு எம்.பிக்கள் அனுசரணை வழங்கவில்லை என்றால் தமிழில் பணி புரியக் கூடிய ஒருவரையும், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தையும் உறுதிப்படுத்திக் காட்டட்டும் என்று சவால் விடுக்கின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment