எல்லைகள் பிரிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது : பிரசாந்தன் - News View

About Us

About Us

Breaking

Monday, December 6, 2021

எல்லைகள் பிரிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது : பிரசாந்தன்

பிரதேச செயலகங்களுக்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளின் எண்ணிக்கையினை குறைத்து, எஞ்சிய பிரிவுகளை இணைத்து எல்லைகள் பிரிக்கப்படுவதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

எல்லைகள் நிர்ணயம் செய்வது தொடர்பாக வினவியபோதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், ஒவ்வொரு பிரதேச செயலக மட்டங்களிலும், கிராம சேவையாளர் பிரிவுகளை குறைத்து எல்லைகள் நிர்ணயம் செய்வது தொடர்பான ஆலோசனைகள் இடம்பெற்று வருகிறது. 

அவ்வாறு எல்லைகள் நிர்ணயம் செய்யப்படுவதனால் அபிவிருத்திக்கென வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்பட்டு மக்களுக்கான பொது வசதிகள் முற்றாக பாதிப்படைய வாய்ப்புள்ளது.

அரச உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் குடும்பநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட அரச சேவையாளர்களின் ஆளணி மட்டுப்படுத்தப்பட்டு வேலையற்றோர் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

எல்லைகள் நிர்ணயம் செய்யப்படுவதனால் குறித்த கிராமத்தின் கிராம சேவையாளர் பிரிவுகளுக்குரிய தனித்துவ கோட்பாடுகள் பாதிக்கப்படுவதுடன், கிராம மட்ட அமைப்புகள், தலைமைத்துவம் என்பவற்றில் பாரிய விரிசலை ஏற்படுத்தும். இது சமூகத்தின் நிலைபேறான வலுவாக்க அபிவிருத்திக்கு அப்பால், நீண்ட பிரிவினையை ஏற்படுத்தும். 

அது மட்டுமல்லாது, கிராம மக்கள் தமது அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் பெரும் சிரமப்படவேண்டி ஏற்படும். எனவே, இதனை தடுத்து நிறுத்தி தற்போதுள்ளவாறு நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

(மண்டூர் குறூப் நிருபர்)

No comments:

Post a Comment