நாளை (05) முதல் சமையல் எரிவாயுவை (LP Gas) சந்தைக்கு வெளியிட, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் எரிவாயு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பின்வரும் 3 நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாட்டிலுள்ள இரு சமையல் எரிவாயு நிறுவனங்களான லிட்ரோ கேஸ் (Litro), லாஃப்ஸ் கேஸ் (Laugfs) நிறுவனங்களுக்கு இவ்வனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1. ஏற்கனவே இறக்குமதி செய்த எரிவாயுவை விநியோகிக்காதிருத்தல்
2. புதிய தொகையை வெளியிட முன், தர நிலைகளுக்கு அமைய நாற்றங்களைக் கண்டறியும் Ethyl Mercaptan உள்ளடக்குதல்
3. இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு 100 எரிவாயு சிலிண்டர்களிலும் ஒன்று எனும் விகிதத்தில் சோதனையிட்டு, Serial Number இட்டு, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையிடம் ஒப்படைத்தல்
இரு எரிவாயு நிறுவனங்களால் இறக்கமதி செய்யப்பட்ட எரிவாயு கப்பல்களை ஆய்வு செய்வதற்கு, இலங்கை தர நிர்ணய நிறுவனம், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு நேற்றையதினம் (03) அதிலிருந்து பெறப்பட்ட மாதிரிகள், இலங்கை பெற்றொலிய கூட்டுத்தாபனத்தின் ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பெறப்பட்ட குறித்த ஆய்வுகூட அறிக்கைக்கு அமைய, மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் நாளை (05) முதல், வீடுகளுக்கான சமையல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள குழுவினால், எரிவாயு நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கை தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், உரிய நிறுவனங்கள் செயற்பட வேண்டுமென, அதிகார சபை அறிவித்துள்ளது.
சந்தைக்கு வீட்டுப் பாவனைக்கான சமையல் எரிவாயுவின் விநியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிற்சாலைகள் மற்றும் சுடுகாடுகளிலுள்ள தகனசாலைகளின் பயன்பாட்டிற்கு எரிவாயுவை (LP Gas) விநியோகிக்க எரிவாயு நிறுவனங்களுக்கு இன்று அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment