தாயின் உடல் பாகங்களை தானம் செய்ய முன்வந்துள்ள நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து விசேட வைத்திய குழுவொன்று ஹெலிகொப்டர் மூலம் சனிக்கிழமை (04) விஜயம் செய்தனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலை தனியார் கம்பெனியொன்றில் கடமையாற்றி வரும் சுத்திகரிப்பு தொழிலாளியான குறித்த பெண் அதிக இரத்த அழுத்தம் காரணமாக நரம்பு வெடித்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், குறித்த பெண் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் அவரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குடும்பத்தினருக்கு வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் உடலில் அனைத்து பாகங்களும் ஒழுங்காக செயற்பட்டு வருவதாகவும், தலையிலுள்ள நரம்பில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இப் பெண்ணின் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் இவரை காப்பாற்ற முடியாவிட்டாலும், இவரால் யாராவது நன்மை பெற வேண்டும் என்ற நோக்கில், குறித்த பெண்ணின் உடற் பாகங்களான சிறுநீரகம் மற்றும் இருதயம் போன்றவற்றை தானம் செய்வதற்கு முன்வந்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலை நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து அப் பெண்ணின் பிள்ளைகள் மற்றும் உறவினர்களின் வேண்டுகோளின்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு தெரியப்படுத்தியதையடுத்து சனிக்கிழமை (04) கொழும்பிலிருந்து வைத்தியர் குழுவொன்று விஷேட ஹெலிகொப்டர் மூலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு வருகை தந்தனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலாவெளி - ஆறாம் கட்டை இரண்டாவது ஒழுங்கையில் வசித்து வந்த டி.சசிரேகா (41 வயது) சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரது பிள்ளைகள் மற்றும் உறவினர்களின் அனுமதியுடன் இரண்டு சிறுநீரகங்களுடன், இருதயம் ஆகியவை பெறப்பட்டுள்ளதாக விசேட வைத்திய குழுவின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
கணவரை இழந்த நிலையில் இரண்டு பிள்ளைகளையும் வளர்க்கும் நோக்கில் திருகோணமலை பொது வைத்தியசாலை தனியார் சுத்திகரிப்பு தொழிலாளியாக கடமையாற்றி வந்த நிலையில் அதிக இரத்த அழுத்தம் காரணமாக நரம்பு வெடித்துள்ளதாக வைத்தியசாலையின் பொறுப்பு வாய்ந்த வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
ரொட்டவெவ குறூப் நிருபர்)
No comments:
Post a Comment