(ஆர்.யசி)
இலங்கை தர நிர்ணய நிறுவனம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுமதியுடன் சமையல் எரிவாயுவை நாட்டிற்குள் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய மூன்று சர்வதேச கப்பல்களில் எரிவாயு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவற்றில் ஒரு கப்பலில் உள்ள எரிவாயுவை பரிசோதனைகளுக்கு பின்னர் இறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தேசார ஜெயவர்தன தெரிவித்தார்.
இன்றைய தினத்தில் இருந்து வீடுகளுக்கு வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்கள் குறித்து மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் கூறினார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டை தவிர்க்கும் நடவடிக்கைகள் குறித்து லிட்ரோ மற்றும் லாப் நிறுவனங்களிடம் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பப்பட்டு வருகின்ற நிலையில் லிட்ரோ நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், நாட்டில் எரிவாயு கசிவு காரணமான வெடிப்பு சம்பவங்கள் மற்றும் அதனால் ஏற்பட்ட எரிவாயு தட்டுப்பாட்டை அடுத்து அதற்கான தீர்வுகளை பெற்றுக் கொள்ள ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார். அதன்போது மக்களை குழப்பும் எந்தவித கருத்துக்களையும் முன்வைக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளார். எனினும் ஒரு சிலர் மக்களை குழப்பியடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு நாம் பொறுப்புக்கூற முடியாது.
எனினும் இப்போது நாட்டில் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. நாட்டிற்குள் எரிவாயுக்களை பெற்றுக் கொடுக்கும் விதமாக மூன்று சர்வதேச கப்பல்கள் வருகை தந்துள்ளன. அவற்றில் ஒரு கப்பலில் உள்ள எரிவாயுயை பரிசோதித்து இறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏனைய இரண்டு கப்பல்களில் உள்ள எரிவாயுவை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தர நிர்ணய நிறுவனத்தின் தலையீட்டிலேயே இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தர நிர்ணய நிறுவனம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுமதியுடன் இந்த எரிவாயு நாட்டிற்குள் இறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்குள் சட்டவிரோதமாக எந்தவொரு எரிவாயு கப்பலும் வரவில்லை, நீதிமன்ற அனுமதிக்கு அமையவே இதுவரை காலமாக கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே எரிவாயுவின் கலப்பில் எந்த முரண்பாடுகளும் இல்லை என்பதே எமது நிலைப்பாடாகும். ரெகுலேடர் தரத்தில் பிரச்சினைகள் இருப்பின் இவ்வாறான நிலைமைகள் ஏற்படும்.
எனவே ஆய்வுகளை சகல தரப்பிடம் இருந்தும் மேற்கொள்ள வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட அதே தரத்திலான எரிவாயுவே இறக்குமதி செய்யப்படுகின்றது.
இன்றைய தினத்தில் இருந்து வீடுகளுக்கு வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்கள் குறித்து மக்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. தரத்தை உறுதிப்படுத்தி, சகல குறைபாடுகளையும் நிவர்த்தி செய்தே சந்தைக்கு புதிய எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றது என்றார்.
No comments:
Post a Comment