எரிவாயு கம்பனிகள் உரிய பாதுகாப்பு முன்னெப்புகளை மேற்கொள்ளாது எரிவாயு இறக்குமதி மற்றும் உற்பத்தி செயற்பாடுகளை மேற்கொண்டு, அவை தமது பொறுப்பை மீறியிருந்தால் அது தொடர்பில் விசாரணை நடத்தி கம்பனிகளுக்கு எதிராக உச்ச நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன, கம்பனிகளுக்கு எதிராக வழக்கு தொடர பின்நிற்க மாட்டோம் எனவும் கூறினார்.
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் வழிகாட்டல்களை பின்பற்றி லிற்ரோ மற்றும் லாப் எரிவாயு கம்பனிகள் உரிய தரத்திலான எரிவாயுவை புதிய ஸ்ரிக்கர் ஒட்டி சந்தைக்கு விநியோகிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்த அவர் எரிவாயு வெடிப்பு சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நியாயம் நிலைநாட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் கலந்து கொண்ட அவர் எரிவாயு விவகாரம் குறித்து தெளிவுபடுத்தினார்.
மேலும் குறிப்பிட்ட அவர், எரிவாயு உற்பத்தி செயற்பாடுகளை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார நேரில் சென்று மேற்பார்வை செய்கிறது. இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவை கப்பலிலிருந்து இறக்க முன்னர் குழுவொன்று சென்று மாதிரிகளை பெற்று ஆய்வு செய்து உரிய தரத்தில் இருந்தால் மாத்திரமே கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும்.
இரு எரிவாயு கம்பனிகளும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் வழிகாட்டல்களை பின்பற்றுகிறதா என தொடர்ச்சியாக மேற்பார்வை செய்யப்படுகிறது.
தொழில்நுட்ப ரீதியான விடயங்கள் இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்டிருப்பதால் மொறட்டுவ பல்கலைக்கழக நிபுணர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டு இது பற்றி ஆராய்ந்து வருகிறது.
இரு கம்பனிகளுக்கும் அந்தக் குழு நேரில் சென்று ஆராய்ந்துள்ளது. வெடிப்பு நடந்த இடங்களுக்கும் சென்றுள்ளனர். பரிந்துரைகளை செயற்படுத்துவதில் முன்னுரிமை வழங்கி செயற்படுவோம்.
இந்தப் பிரச்சினையை அரசும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சும் உச்ச அளவில் செயற்பட்டு இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த 29ஆம் திகதி ஒரே நாளில் 16 சம்பவங்கள் நடந்தன. ஜனவரி முதலாம் திகதி முதல் கடந்த மாதம் 29 வரை 28 சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த காலத்திலும் இவ்வாறு நடந்துள்ளன. கடந்த காலத்தில் அனைத்து அரசுகளும் நிறுவனங்களும் இது தொடர்பில் கவனம் செலுத்தியிருக்கவில்லை.
1960 கள் தொடக்கம் எந்த அரச நிறுவனமும் மேற்பார்வையும் பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை. கேஸ் உற்பத்தி செயற்பாடுகள், இறக்குமதி செயற்பாடுகளில் எந்த பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் பின்பற்றப்படவில்லை. இந்த பொறுப்பில் இருந்து அவற்றுக்கு தப்ப முடியாது.
12.5 கிலோ சிலிண்டரை 18 லீட்டராக மாற்றியதற்கு எதிராக நாம் வழக்கு தொடர்ந்தோம். கட்டாயம் நீதிமன்ற நடவடிக்கை எடுப்போம். வழக்கு நடவடிக்கை எடுப்பதை முறையாக மேற்கொள்ளாவிட்டால் அது கம்பனிகளுக்கு சாதகமாக அமையும் என்றார்.
எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படுமா ? வீடுகளில் உள்ள சிலிண்டர்களை மாற்ற முடியுமா? என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த அவர், சம்பவம் நடந்த இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தப்பட்டது. 400 ற்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த தரவுகளை பயன்படுத்தி இவ்வாறான சம்பவங்கள் நடக்காதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் நிலைநாட்டப்படும்.
இது சிக்கலான பிரச்சினையாகும். 270 இலட்சம் சிலிண்டர்கள் வரை மாதாந்தம் பரிமாறப்படுகிறது. 30 வீதமான மக்களை பாதிக்கும் பிரச்சினை இது. முதன்முறையாகவே இந்தப் பிரச்சினை ஏற்பட்டது.
நாட்டுக்கு எரிவாயு கொண்டுவருவது நிறுத்தப்பட்டதோடு தரமற்ற எரிவாயு விநியோகிப்பதும் நிறுத்தப்பட்டது. முன்னரை விட கவனமாக எரிவாயு பயன்படுத்துமாறு பாவனையாளர்களை கோருகிறேன் என்றார்.
ஷம்ஸ் பாஹிம்
No comments:
Post a Comment