இவ்வருடம் ஜனவரி மாதம் தொடக்கம் நேற்று வரை 1,01,472 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்று சென்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
ருமேனியா, சைப்ரஸ், ஜப்பான், துபாய், அபுதாபி, ஜோர்டான் உள்ளிட்ட பல நாடுகளில் வேலை வாய்ப்புகள் உள்ளதாக கூறிய அவர் அதன்படி முதல் கட்டமாக ருமேனியாவுக்கு 20 தொழிலாளர்கள் கடந்த 05ஆம் திகதி புறப்பட்டுச் சென்றதாகவும் இவ்வாரம் கொரியாவுக்கு 33 பேர் செல்லவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் வெளிநாட்டு பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடான ருமேனியாவில் ஹோட்டல் துறையில் பணியாளர்களுக்கான வேலை வாய்ப்புகள் தற்போது கிடைத்துள்ளதாகவும் பல கட்டங்களாக இவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கை எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
கொவிட்19 சவாலுக்கு மத்தியில் இந்த இலக்கை அடைந்துள்ளதாக கூறிய இராஜாங்க அமைச்சர் எதிர்வரும் வருடங்களில் மூன்று இலட்சம் பேரை வெளிநாட்டு பணியாளர்களாக அனுப்புவதே இலக்காகும் எனவும் தெரிவித்தார்.
இவ்வருடம் 08 பில்லியன் ரூபா இலக்கை கொவிட் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அடைந்துள்ளதாக கூறிய இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன எதிர்வரும் வருடத்தில் 10 மில்லியன் ரூபாவாக அதனை உயர்த்துவதே நோக்கம் எனவும் கூறினார்.
2017, 2018, 2019ஆம் வருடங்களில் வெளிநாட்டு பணியாளர்கள் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தையும் தாண்டி இருந்தது. 2020ஆம் ஆண்டும் இவ்வருடமும் பெரும் சவாலான இரண்டு வருடங்களாகும்.
வெளிநாட்டிற்குச் செல்லும் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது கொவிட்19 காரணமாக தடைப்பட்டது எனக் கூறிய இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன இவ்வருடமும் கொவிட்19 காரணமாக வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காக செல்பவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய டிசம்பர் மாதம் முடிவடைவதற்கு முன்னரும் எதிர்வரும் ஜனவரி மாதத்திலும் பல குழுக்கள் வெளிநாடுகளுக்கு செல்லவுள்ளதாகவும் அவர்களுக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றதுடன் இணைந்து பயிற்சிகள் அளிக்கப்படுவதாகவும் கூறினார்.
No comments:
Post a Comment