(எம்.மனோசித்ரா)
புதிதாக இனங்காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் தொற்றாளர்கள் தொடர்பில் எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும், அவர்களில் ஒருவர் இந்திய பிரஜை என்ற தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
மேலும் ஒமிக்ரோன் பிறழ்வின் காரணமாக அபாயம் மிக்கதொரு சூழல் உருவாகியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளமை கவலைக்குரியது என்றும் உபுல் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புதிதாக இனங்காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் தொற்றாளர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எவ்வாறிருப்பினும் ஒமிக்ரோன் தொற்றாளர்களில் ஒருவர் இந்திய பிரஜை என்று எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
அத்தோடு குறித்த நபர் இரு தினங்கள் பல பொது ஸ்தானங்களுக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டுக்கு வரும் சகல இலங்கை பிரஜைகளும், வெளிநாட்டவர்களும் விமான நிலையத்தில் கட்டாயம் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது.
ஒமிக்ரோன் பிறழ்வின் காரணமாக இவ்வாறானதொரு அபாயம் மிக்க சூழல் உருவாகியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் சுகாதார விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளமை மற்றும் விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படுவதில் காணப்படும் தளர்வுகள் கவலையளிக்கின்றன என்றார்.
No comments:
Post a Comment