(எம்.மனோசித்ரா)
இந்தியாவில் நாளாந்தம் ஒமிக்ரோன் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் பிரதிபலனாக கடந்த கால நிலைவரங்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பகுப்பாய்வின் அடிப்படையில் அடுத்த இரு மாதங்களில் இலங்கையில் ஒமிக்ரோன் பிறழ்வினால் ஐந்தாவது அலை உருவாகக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. எனவே இதனைத் தடுப்பதற்கு சுகாதார விதிமுறைகளை கடுமையாக நடைமுறைத்தி, அது தொடர்பில் தீவிர கண்காணிப்பும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.
இலங்கையில் புதிதாக ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை தொடர்பில் வினவியபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்தியாவில் டெல்டா பிறழ்வு இனங்காணப்பட்டு சுமார் ஒன்றரை மாதங்களின் பின்னர் பாரிய டெல்டா அலை உருவாகிறது. அதே போன்று தற்போது இந்தியாவில் ஒமிக்ரோன் பிறழ்வின் பரவலும் அதிகரித்து வருகிறது. வியாழனன்று மாத்திரம் அந்நாட்டில் 73 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மகாராஷ்ட்ரா மாநிலத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்தியாவில் டெல்டா அலை உருவாகி இரு மாதங்களின் பின்னர் இலங்கையிலும் டெல்டா அலை உருவாகியது. டெல்டா பரவலின் காரணமாகவே இலங்கையில் மூன்றாவது அலை ஏற்பட்டது. இவ்வாறான நிலையில் தற்போது இலங்கையில் 5 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
எனவே எதிர்வரும் இரு மாதங்களில் பிரிதொரு அலை இலங்கையில் உருவாகக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. கடந்த கால நிலைவரங்களை பகுப்பாய்வு செய்யும் போது இது தெளிவாகிறது.
தற்போது பிரித்தானியாவிலும் தொற்றாளர் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் பெருமளவானோருக்கு முதலிரு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளதோடு, மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் இரு மாதங்களில் இலங்கையில் ஒமிக்ரோன் பிறழ்வினால் உருவாகக் கூடிய பாரிய அலையை தடுக்கும் விதத்தில் நாம் செயற்பட வேண்டும்.
தற்போது 5 ஒமிக்ரோன் தொற்றாளர்களே இனங்காணப்பட்டுள்ள போதிலும், அதன் பரவல் வீதம் மிக அதிகம் என்று ஆய்வுகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஒமிக்ரோன் வைரஸ் குறுகிய காலத்தில் மிக வேகமாகப் பரவக்கூடிய சாத்திம் காணப்படுகிறது.
பண்டிகைக் காலம் நெருங்குகின்றமையால் 20 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். அது மாத்திரமின்றி சுகாதார விதிமுறைகளும் மிகவும் இறுக்கமான முறையில் கடைபிடிக்கப்பட வேண்டும்.
சுகாதார விதிமுறைகள் பெயரவில் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்படாமல் அவை இறுக்கமாக்கப்பட்டு, அது தொடர்பிலான தீவிர கண்காணிப்புக்களும் முன்னெடுக்கப்பட வேண்டும். இவை முறையாக செய்தால் மாத்திரமே ஒமிக்ரோன் பிறழ்விலிருந்து நாட்டை பாதுகாக்க முடியும்.
கடந்த காலங்களில் டெல்டா பிறழ்வு இனங்காணப்பட்ட போது அதனால் பாரிய பாதிப்புக்கள் ஏற்படாது என்று கூறிக் கொண்டிருந்தனர். ஆனால் இலங்கையில் டெல்டா பிறழ்வின் காரணமாகவே பாரிய அழிவுகள் ஏற்பட்டன.
இலங்கையில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களில் 85 சதவீதமானவை டெல்டா தொற்றினால் ஏற்பட்டவையாகும். எனவே ஒமிக்ரோன் பிறழ்வால் உருவாகக் கூடிய ஐந்தாவது அலையை நாம் தடுக்க வேண்டும். இதற்கு மேற்குறிப்பிடப்பட்ட விடயங்களைக் கடைபிடிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment