(எம்.மனோசித்ரா)
நாட்டில் புதிதாக இனங்காணப்பட்ட ஒமிக்ரோன் தொற்றாளர்களில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்ததன் பின்னர் நாட்டிலிருந்து வெளியேறியுள்ள நபர் ஆவார். குறித்த நபர் தொடர்புகளைப் பேணியோர் மற்றும் அவர் பயணித்துள்ள இடங்கள் தொடர்பான தகவல்கள் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் சேகரிக்கப்பட்டு வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், புதிதாக இனங்காணப்பட்ட ஒமின்ரோன் தொற்றாளர்களில் ஒருவர் வெளிநாட்டு பிரஜை என்பதோடு, அவர் தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளவராவார் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழத்தினால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் இருவர் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்றுறுதி செய்யப்பட்டு, அந்த மாதிரிகள் கொவிட் பிறழ்வுகளை இனங்காண்பதற்கான ஆய்வுகூட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவர் நாட்டை விட்டுச் சென்றுள்ளார். நாட்டை விட்டு சென்றுள்ள நபர் தவிர்ந்த மற்றைய தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பைப் பேணியவரே மூன்றாவது தொற்றாளர் ஆவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலிருந்து வெளியேறிலுள்ள நபர் தொடர்பாக தகவல்கள் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவினால் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதற்கமைய உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment