கொவிட் தொற்றுக்கு எதிரான மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியை அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், தற்போது 30 முதல் 60 வயது வரையிலான அனைவருக்கும் ஏற்ற வேண்டும் என்ற ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய கொழும்பு மாநகர சபை தன் தடுப்பூசி திட்டத்தை மேலும் விரைவு படுத்தியுள்ளது.
கொழும்பு வாழ் மக்கள் தவறாவது தமது தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளுமாறு கொழும்பு மாநகர சபை பொது சுகாதார மருத்துவப் பிரிவின் தலைமை மருத்துவ அதிகாரி ருவன் விஜயமுனி அனைவரையும் கேட்டுள்ளார். இதன் மூலம் விரைவாகவே கொழும்பை மூன்று தடுப்பூசிகள் போடப்பட்ட முதல் நகரமாக்க முடியும் என அவர் தெரிவிக்கிறார்.
முதலாம் கட்டத்தில் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் 109025 பேர் அஸ்ட்ரா செனகா தடுப்பூசியை பெற்றனர். இதே முதலாம் கட்டத்தில் சினோபாம் தடுப்பூசி 2, 80673 பேருக்கு ஏற்றப்பட்டது.
2021 ஜூன் மாதமளவில் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தில் 51786 பேருக்கு அஸ்ட்ரா செனகா தடுப்பூசியும் சினோபாம் தடுப்பூசி 2,23632 பேருக்கும் போடப்பட்டது.
கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார பிரிவினர் 2020 மார்ச் மாதம் முதல் இன்று வரை அயராது கொவிட் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வைத்தியர்களும், பொது சுகாதார பரிசோதகர்களும், தாதிகளும், ஏனைய ஊழியர்களும் ஓயாது பணியாற்றி வருவதால் கொவிட் பரவும் வேகம் கொழும்பில் மந்தநிலை அடைந்திருக்கிறது.
இதே சமயம் இராணுவ சுகாதார பிரிவினரும் கொவிட்19 தடுப்புதிட்டத்தை கொழும்பில் முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பு மாநகர சபை 47 வட்டாரங்களைக் கொண்டது. 119 உறுப்பினர்கள் உள்ளனர்.
கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார வைத்திய பிரிவினரின் தலைமையில் 2021 மார்ச் மாதம் முதலாம் கட்ட கொவிட்19 தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப்பணியில் மாநகர வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், தாதிகள், பொலிஸார் கிராம சேவகர்கள் என்போர் இணைந்து பணியாற்றினர்.
ஊசியேற்றப்பட்ட அனைத்து பயனாளிகளுக்கும் கணினியில் பதிவு செய்யப்பட்ட அட்டைகள் வழங்கப்பட்டன.
இந்த கொவிட்19 தடுப்பூசி அட்டையை ஒவ்வொரு வரும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். பொது இடங்களில் இந்த அட்டையை காட்ட வேண்டிய அவசியம் எழலாம். எதிர்காலத்தில் இது உங்களுக்கு தேசிய சுகாதார அத்தாட்சி அட்டையாகப் பயன்படும்.
மா நகர சபை தற்போது மூன்றாம் கட்ட தடுப்பூசியை வழங்கி வருகிறது இதை ஏற்றிக் கொள்வதால் பக்கவிளைவுகள் ஏற்படலாம் எனச் சிலர் கருதி அதைத் தவிர்த்து வருகின்றனர். இது எந்த ஆதாரமுமற்ற புரளியாகும். இக்கூற்றை நாம் முற்றாக நிராகரிக்கிறோம்.
மேலும் சிலர் எந்தவொரு தடுப்பூசியையும் ஏற்றாது நகரில் சுற்றித் திரிகின்றனர். ஏனையோர் தடுப்பூசிகளை ஏற்றி பாதுகாப்பு பெறும்போது இவர்கள் எந்தத் தடுப்பூசியையும் ஏற்றாமல் இருப்பது இவர்களை பேராபத்தில் கொண்டு விட்டு விடும். இத்தகையோரைச் சுற்றியுள்ளோர் இவர்களை தடுப்பூசி ஏற்றிக் கொள்ளத் தூண்ட வேண்டும் என்று தெரிவித்தார் விஜயமுனி.
நாட்டில் பல்வேறு வகையான கொவிட்19 பிறழ்வுகள் காணப்படுவதால் மிகுந்த எச்சரிக்கை அவசியம். கொழும்பு சன நடமாட்டம் மிக்க பகுதி. மக்கள் ஒன்று கூடுவது அதிகம். எனவே தடுப்பூசி விஷயத்தில் அலட்சியம் வேண்டாம் என்கிறார் இவர்.
கே. பி. பி.புஷ்பராஜா
No comments:
Post a Comment