சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை : தேடப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர் பிரான்சில் கைது - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 7, 2021

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை : தேடப்பட்ட குற்றவாளிகளில் ஒருவர் பிரான்சில் கைது

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி கொலையோடு தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் சவுதி அரேபியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை அன்று பாரிஸில் உள்ள ஷார்ல் த கோல் விமான நிலையத்தில் காலித் ஏத் அலோடைபி கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பு தெரிவித்தது.

இந்தக் கொலை தொடர்பாக துருக்கியால் தேடப்படும் 26 சவுதி அரேபியர்களில் இவரும் ஒருவர் என நம்பப்படுகிறது.

இந்தக் கைது நடவடிக்கை தவறான அடையாளத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என்றும் கொலையில் தொடர்புடையவர்கள் சவுதி அரேபியாவில் தண்டனை பெற்றுவிட்டார்கள் என்றும் ஒரு சவுதி அதிகாரி பின்னர் தெரிவித்தார்.

"33 வயதான அலோடைபி, சவுதியின் முன்னாள் அரச காவலர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது சொந்தப் பெயரில் பயணம் செய்துள்ளார். மேலும், அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்," என்று ஆர்.டி.எல் வானொலி தெரிவித்துள்ளது.

சவுதி அரசாங்கத்தின் முக்கிய விமர்சகரான கஷோக்கி, அக்டோபர் 2018ம் ஆண்டு இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணை தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

சவுதி அரேபியாவின் முன்னாள் வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளரை, நாட்டுக்கே திரும்பி வரும்படி வற்புறுத்துவதற்காக அனுப்பப்பட்ட குழுவால், கொல்லப்பட்டதாக சவுதி அரேபியா கூறியுள்ளது.

ஆனால், சவுதி அரசின் உயர்மட்ட அதிகாரிகளின் உத்தரவின் பேரில்தான் அவர்கள் செயல்பட்டதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தக் கொலை, உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு சவுதி அரேபியாவின் ஆட்சியாளரான இளவரசர் முகம்மது பின் சல்மானின் நற்பெயரையும் சேதப்படுத்தியுள்ளது. ஆனால், அவர் இதில் தனக்கு எந்தப் பங்கும் இல்லையென்று மறுத்துள்ளார்.

சவுதி நீதிமன்றம், 2019ம் ஆண்டு இந்தக் கொலையில் தொடர்புள்ளவர்கள் என்று பெயரை வெளியிடாமல் எட்டு பேருக்குத் தண்டனை வழங்கியது. அவர்களில் ஐந்து பேர் கொலையில் நேரடியாகப் பங்கேற்றதாகக் கண்டறியப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர், மரண தண்டனை 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையாக மாற்றப்பட்டது. மேலும் மூன்று பேருக்கு, குற்றத்தை மறைத்தமைக்காக 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்தது.

சவுதியின் விசாரணை, "நீதிக்கு எதிரானது" என்று கூறிய அப்போதைய ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ஆக்னெஸ் காலமர்ட் அதை நிராகரித்தார்.

2019ம் ஆண்டு வெளியிட்ட ஓர் அறிக்கையில், "கஷோக்கி, முன்கூட்டியே திட்டமிட்ட கொலைக்குப் பலியானார். இதற்கு சவுதி அரசே பொறுப்பு," என்று காலமர்ட் தெரிவித்தார்.

கஷோக்கியின் கொலைக்கு பிறகு சவுதி இளவரசரைச் சந்தித்த முதல் பெரிய மேற்கத்திய தலைவர், பெருமையை பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோங். அவருடைய சந்திப்பு நிகழ்ந்து அடுத்த சில நாட்களில் அலோடைபியின் இந்தக் கைது நடவடிக்கை நிகழ்ந்துள்ளது.

"நாங்கள் எல்லாவற்றையும் பற்றிப் பேசினோம். எந்தத் தடையுமின்றி, மனித உரிமைகள் பற்றிய கேள்வியை வெளிப்படையாகக் கேட்க முடிந்தது" என்று மக்ரோங் சனிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சந்தேகிக்கப்படுபவர் குறித்து இதுவரை தெரிந்தவை என்ன?
கஷோக்கியின் கொலை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அலோடைபியைக் கைது செய்ய சவுதி விசாரணை அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால், இறுதியில் அவர் மீது குற்றம் சாட்ட வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டதாக காலமர்டினுடைய அறிக்கை கூறுகிறது.

சவுதி அரேபியாவின் ராணுவப் படைகளின் ஒரு பிரிவான அரச காவல் உறுப்பினராக அலோடைபியை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அவர் 2017ம் ஆண்டு, அமெரிக்காவிற்கு வந்தபோது, பட்டத்து இளவரசர் சல்மானும் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் காணப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும், அலோடைபி அக்டோபர் 2ம் திகதியன்று இஸ்தான்புல்லுக்கு வந்ததாகவும் கஷோக்கி கொலை செய்யப்பட்டபோது அவர் சவுதி துணைத் தூதரின் இல்லத்தில் இருந்ததாகவும் துணைத் தூதரகத்தில் இல்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

கொலைக் குற்றச்சாட்டின் பேரில், இஸ்தான்புல்லில் ஆஜராகாமல் இருக்கும் அலோடைபியை துருக்கிக்கு நாடு கடத்துவதற்கான கோரிக்கையை சவுதி அரேபியா நிராகரித்தது.

ஆனால், கடந்த செவ்வாய்க்கிழமையன்று துருக்கியின் கைது பிடியாணையை பிரான்ஸ்  அதிகாரிகள் நிறைவேற்றியதாக காவல்துறை தரப்பு உறுதி செய்துள்ளது. அலோடைபி சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்திற்கு விமானத்தில் ஏறவிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

இப்போது ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் மனித உரிமை அமைப்பின் பொதுச் செயலாளராக இருக்கும் காலமர்ட் தன்னுடைய ட்வீட்டில், "இந்தக் கைது, நீதிக்கான தேடலில் ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கல்லாம்," என்று கூறியுள்ளார்.

கஷோக்கியைத் திருமணம் செய்துகொள்ளவிருந்த ஹாதீஜா ஜெங்கிஸ், அலோடைபி கைது செய்யப்பட்டதை வரவேற்றதோடு, "அவருடைய குற்றத்தை விசாரிக்க வேண்டும் அல்லது அதைச் செய்ய முன்வரும் நாட்டிடம் அவரை ஒப்படைக்க வேண்டும்," என்று பிரான்சை வலியுறுத்தினார்.

சவுதி அரசுக்கு கெட்ட செய்தி
கஷோக்கி கொலைக்குப் பிறகு இந்தச் சமீபத்தி முன்னேற்றம், ரியாத்தில் மிகவும் விரும்பத்தகாத ஒன்றாகவே இருக்கும். அதேநேரத்தில், முன்னாள் ஐ.நா சிறப்பு அறிக்கையாளரும் மனித உரிமைக் குழுக்களுக்கும் கேட்ட முன்னேற்றத்தை, இதன் முடிவுறாத விசாரணையில் இந்த நடவடிக்கை அளிக்கும்.

சவுதி அரேபியர்களைப் பொறுத்தவரை, இந்தக் கதை நீண்ட காலத்திற்கும் முன்பாகவே, இதில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை விசாரணைக்கு உட்படுத்தியதோடு முடிந்துவிட்டது.

இதுவொரு மோசமான நடவடிக்கை என்றும் தற்போது தொடர்புடையவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், கொலை நடந்த இடமான, இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்தைக் கண்காணித்த துருக்கி, அதனுள் என்ன நடந்தது என்பது குறித்து நன்கு அறிந்து வைத்துள்ளது. 20 க்கும் மேற்பட்ட சவுதி அரேபிய அதிகாரிகள் இந்த வழக்கில் ஆஜராகவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

மேற்கத்திய உளவுத்துறை அதிகாரிகள் இந்த முன் திட்டமிடப்பட்ட கொலையின் மிக முக்கியத் தூண்டுதலாக இருந்தவர்கள் தப்பித்துவிட்டதாக நம்புகிறார்கள். பிரான்சில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர், துருக்கிக்கு மாற்றப்பட்டால், அது தீவிரமான வெளியறவு மோதலைத் தூண்டிவிடும்.

ஜமால் கஷோக்கி இறந்தது எப்படி?
2017ம் ஆண்டு அமெரிக்காவிற்குச் சொந்த விருப்பத்தில் தப்பிச் சென்ற 59 வயது நிரம்பிய பத்திரிகையாளரான ஜமால் கஷோக்கி, ஹாதீஜா ஜெங்கிஸை திருமணம் செய்யத் தேவையான ஆவணங்களைப் பெறும் முயற்சியின்போது, அக்டோபர் 2, 2018 அன்று சவுதி துணை தூதரகத்திற்குள் நுழைந்தார்.

அந்த நேரத்தில் தூதரகத்தின் நுழைவாயில் வரை உடன் சென்ற ஹாதீஜா ஜெங்கிஸ், வெளியிலேயே வராமல்போன கஷோக்கிக்காக தூதரக கட்டடத்திற்கு வெளியே 10 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்தார்.

அன்று தூதரகத்திற்குள் கஷோக்கி 'கொடூரமாகக் கொல்லப்பட்டார்,' என்று காலமர்ட் தன்னுடைய அறிக்கையில் முடிவு செய்தார். துருக்கிய உளவுத்துறையால் தூதரகத்திற்குள் நடந்த உரையாடல்களின் ஒலிப்பதிவுகளைக் கேட்டபின் அவர் அந்த முடிவுக்கு வந்துள்ளார்.

சவுதி அரேபிய வழக்கறிஞர்கள், இந்தக் கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதல்ல என்று முடிவு செய்தனர்.

"கஷோக்கியை அவருடைய விருப்பத்துடனோ அல்லது வலுக்கட்டாயமாகவோ மீண்டும் அழைத்துவர, இஸ்தான்புல்லுக்கு அனுப்பப்பட்ட, பேச்சுவார்த்தை குழுவின் தலைவர்தான் இந்தக் கொலைக்கு உத்தரவிட்டுள்ளார்," என்று அவர்கள் கூறுகின்றனர்.

கடும் போராட்டத்திற்குப் பிறகு கஷோக்கி வலுக்கட்டாயமாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் அதிகளவு போதைப் பொருளை ஊசி மூலம் செலுத்தியதாகவும் இதன் விளைவாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் வழக்கறிஞர்கள் முடிவுக்கு வந்தனர்.

அவர் இறந்த பிறகு, உடல் துண்டாக்கப்பட்டு, தூதரகத்திற்கு வெளியே இருந்த உள்ளூரைச் சேர்ந்த கூட்டாளியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருடைய உடலின் பாகங்கள் கண்டுபிடிக்கப்படவே இல்லை.

தூதரத்திற்குள் நுழைந்தவுடனேயே, கஷோக்கிக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தியதாகவும் பின்னர் அவருடைய உடல் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகவும் துருக்கிய வழக்கறிஞர்கள் முடிவுக்கு வந்தனர்.

No comments:

Post a Comment