நாட்டிற்கு இராணுவம் சுமை என்ற கூட்டமைப்பின் கருத்தை பொது எதிர்க்கட்சி ஏற்றுக் கொள்கின்றதா ? : பாராளுமன்றத் தேர்தலை நடத்தி, மீண்டும் மக்கள் ஆணையை கேட்போம் - காஞ்சன விஜயசிறி - News View

Breaking

Tuesday, November 23, 2021

நாட்டிற்கு இராணுவம் சுமை என்ற கூட்டமைப்பின் கருத்தை பொது எதிர்க்கட்சி ஏற்றுக் கொள்கின்றதா ? : பாராளுமன்றத் தேர்தலை நடத்தி, மீண்டும் மக்கள் ஆணையை கேட்போம் - காஞ்சன விஜயசிறி

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டிற்கு இராணுவம் சுமை என்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்து தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் தமது நிலைப்பாட்டை கூற வேண்டும். இதுவா பொது எதிர்கட்சியின் நிலைப்பாடு என சபையில் கேள்வி எழுப்பிய இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசிறி, மாகாண சபைத் தேர்தல், உள்ளூராட்சி சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தலை நடத்த முன்னர் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவோம். மீண்டும் மக்கள் ஆணையை கேட்போம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (22), வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டிற்கு இராணுவம் சுமை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் சபையில் கூறுகின்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த கருத்து தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் தமது நிலைப்பாட்டை கூற வேண்டும்.

இதுவா பொது எதிர்க்கட்சியின் நிலைப்பாடு என்பதை கூற வேண்டும். கூட்டமைப்பினர் இவ்வாறு சபையில் கூறுகையில் அதனை எதிர்த்து எவருமே கருத்து தெரிவிக்கவில்லை.

இன்று நாம் பல சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றோம், ஆனால் சவால்களை கண்டு நாம் அஞ்சவில்லை. பல சவால்கள், நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து மீண்டு வருகின்றோம்.

நாட்டிற்குள் மீண்டும் டொலர்களை கொண்டுவரும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனை குழப்பவே எதிர்கட்சிகள் முயற்சிக்கின்றனர்.

நாம் தேர்தல்களுக்கு அஞ்சவில்லை. மாகாண சபைத் தேர்தலை, உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துங்கள், ஜனாதிபதித் தேர்தலை நடத்துங்கள் என எதிர்கட்சியினர் கூறுகின்றனர். அதற்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவோம்.

இரண்டரை ஆண்டுகளில் பாராளுமன்றத்தை கலைக்க முடியும், எனவே மீண்டும் பாராளுமன்ற தேர்தலை நடத்தி மக்கள் ஆணையை பெற்றுக் கொண்டு ஆட்சியை அமைக்க போட்டியிடுவோம் என்றார்.

No comments:

Post a Comment