வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கமும், எதிர்க்கட்சியும் இணைந்து செயற்பட வேண்டும் - எஸ்.பி திசாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 23, 2021

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கமும், எதிர்க்கட்சியும் இணைந்து செயற்பட வேண்டும் - எஸ்.பி திசாநாயக்க

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

கொரோனா பாதிப்பு காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் முதலீட்டாளர்கள் வருவதை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என எஸ்.பி திசாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (22) இடம்பெற்ற 2022 ஆம் வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த நிலையில் அரசாங்கத்துடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு மக்களை உசுப்பி விடும் நிலையே காணப்படுகிறது. இந்நிலையில் நாட்டின் பொருளாதாரம் அன்றி கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையே அதிகரிக்கும்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நாட்டுக்கு வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் சந்தேகத்தை நீக்குவதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளும்போது முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வரும் சந்தர்ப்பங்களே இழக்கப்படும்.

கொரோனா வைரஸ் சூழ்நிலைக்குப் பின்னர் ஆசிய நாடுகளில் 1.2 ட்ரில்லியன் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியா, சீனா, சிங்கப்பூர், வியட்னாம்,பங்களாதேஷ் போன்ற நாடுகளிலேயே அந்த முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எமது நாட்டுக்கும் முதலீட்டாளர் வருகை தர வேண்டுமானால் எதிர்க்கட்சியின் பூரண ஒத்துழைப்பு அவசியமாகும். நாட்டில் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து செயற்படுவதை சர்வதேச சமூகம் பார்க்க வேண்டும் அப்போதுதான் நாட்டிற்கு சர்வதேச முதலீட்டாளர்கள் வருகை தருவர்.

அரச அதிகாரிகள் மத்தியில் உள்ள பயம் நீக்கப்பட வேண்டும். அமைச்சர்கள் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலமைப்பின் 52.2 இல் அமைச்சர்கள் எடுக்கக்கூடிய தீர்மானம் தொடர்பில் சரத்துக்கள் உள்ளன. அதனை முறையாக பயன்படுத்தி அதிகாரிகள் பயமின்றி செயற்படுவதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பது அமைச்சர்களின் பொறுப்பாகும் என்றார்.

No comments:

Post a Comment