தடுப்பூசி பெற்ற அட்டையை கொண்டு செல்வதை கட்டாயப்படுத்த அவதானம் - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல - News View

Breaking

Friday, November 5, 2021

தடுப்பூசி பெற்ற அட்டையை கொண்டு செல்வதை கட்டாயப்படுத்த அவதானம் - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல

(எம்.மனோசித்ரா)

பொது இடங்களுக்குச் செல்லும் போது முழுமையாக தடுப்பூசி பெற்றுக் கொண்டதை உறுதிப்படுத்துவதற்கான அட்டையை கொண்டு செல்வதை கட்டாயமாக்குவது தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெகினன், உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கலாநிதி அலாகா சிங் ஆகியோருடன் சுகாதார அமைச்சின் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

கனடாவில் பொது இடங்களுக்குச் செல்லும் போது முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதை உறுதிப்படுத்தும் அட்டையை எடுத்துச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெகினன் இதன் போது தெரிவித்தார்.

இவ்வாறான கட்டாயமாக்கல் ஊடாக கொவிட் தொற்றிலிருந்து ஒவ்வொரு நபர்களும் பாதுகாப்பு பெறுவதோடு, ஏனையோரும் பாதுகாக்கப்படுகின்றனர் என்றும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.

மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை மிகவும் சிறந்தவொரு செயற்பாடாகும் என்றும், எதிர்காலத்தில் ஏனையவர்களுக்கும் வழங்கப்பட்டால் அது மிக முக்கியத்துவமுடைய விடயமாகும் என்று கனேடிய உயர் ஸ்தானிகர் இதன்போது தெரிவித்தார்.

இலங்கையில் தடுப்பூசி வழங்கும் பணிகளை மிகவும் சுமூகமான முறையில் முகாமைத்துவம் செய்தமையால் வெற்றிகரமாக அந்த பணிகளை முன்னெடுக்க முடிந்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி, 'இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற வீடுகளிலேயே சிகிச்சையளிக்கும் முறைமை பாரிய வெற்றியளித்துள்ளது. இதனை உலகிற்கு முன்னுதாரணமாகக் கூற முடியும். கொவிட் தொற்றுக்கு மாத்திரமின்றி ஏனைய நோய்களுக்கும் இவ்வாறான சிகிச்சை வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பது மிகவும் முக்கியத்துவமுடையதாகும்' என்று குறிப்பிட்டார்.

இதன் போது கருத்து வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, 'கொவிட் தொற்றாளர்களை பாதுகாப்பது என்னுடைய பொறுப்பாகும். எனினும் குறித்த நபரிடமிருந்து பிரிதொருவருக்கு தொற்றுப் பரவுவதை தடுப்பது அவரவர் பொறுப்பாகும்.

இவ்வாறான பின்னணியில் பொது இடங்களுக்குச் செல்லும் போது கொவிட் தடுப்பூசி அட்டையைக் கொண்டு செல்லல் கட்டாயமாக்கப்படுகின்றமை நன்மையானதொரு விடயமாகும்.

தற்போது ஐரோப்பிய நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் வெற்றியளித்துள்ளது. எனவே இலங்கையிலும் இதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது.' என்று தெரிவித்தார்.

இதன்போது நாட்டின் சுகாதார சேவைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் கனேடிய அரசாங்கம் என்பன இணைந்து அன்பளிப்பாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment