பிரதமர் மஹிந்தவினால்தான் ரணில் தப்பினார் : அலரி மாளிகையில்தான் முடிவுகள் எடுக்கப்பட்டன : நாட்டுக்கு சிறந்த கொள்கைகளை கொண்டுவந்தவரை விமர்சிக்கின்றனர் - மஹிந்தானந்த - News View

Breaking

Wednesday, November 24, 2021

பிரதமர் மஹிந்தவினால்தான் ரணில் தப்பினார் : அலரி மாளிகையில்தான் முடிவுகள் எடுக்கப்பட்டன : நாட்டுக்கு சிறந்த கொள்கைகளை கொண்டுவந்தவரை விமர்சிக்கின்றனர் - மஹிந்தானந்த

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

என்னை கொலை செய்ய முயற்சித்த விவகாரத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால்தான் ரணில் விக்கிரமசிங்க தப்பினார். ரணில் விக்கிரமசிங்க மீது என்னால் முறைப்பாடு செய்திருக்க முடியும். எனினும் அந்த விடயத்தை விட்டு விடுங்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ என்னிடம் கேட்டுக்கொண்டதாலேயே ரணில் மீது முறைப்பாடு செய்யவில்லை என அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்ற ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கான செலவின தலைப்புக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் நான் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் பழிவாங்கப்பட்டோம். முதல் 10 திருடர்கள் என அப்போதைய ஆளுந்தரப்பினர் தொடர்பில் நான் முறைப்பாடு செய்து இரண்டு வருடங்களாகின்றன. எனினும் இதுவரையில் ஒருவரிடமிருந்து கூட வாக்குமூலம் பெறப்படவில்லை

இதேவேளை, எதிர்க்கட்சியின் முன்வரிசையில் உள்ள உறுப்பினர் ஒருவர் தொடர்பில் என்னிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து வாக்குமூலம் வழங்கினால் பிணை கூட வழங்காது அவரை கைது செய்து சிறையில் அடைப்பார்கள். அந்த முன்வரிசை உறுப்பினர் மட்டுமல்ல அவரது முழுக் குடும்பமும் கைது செய்யப்படுவார்கள்.

இதேபோல முன்னாள் எம்.பி ரஞ்சன் ராமநாயக்கவுடன் இணைந்து முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்னை கொலை செய்ய முயன்றார் என முறைப்பாடு செய்தால் ரணிலும் கைது செய்யப்படுவார்.

இந்த விடயத்தை விட்டுவிடுங்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுகொண்டதாலேயே நான் இந்த விடயத்தை விட்டுவிட்டேன். அதனால் ரணில் தப்பித்தார்.

அப்போது பொலிஸு க்கு பொறுப்பான அமைச்சராக இருந்த சாகல ரத்னாயக்க பாதாள உலகத்திற்கு உதவினார். ஆனால் பாதாள உலகத்தை ஒழித்தது கோத்தபாய ராஜபக்ஷதான். இன்று பாதாள உலகத்தினரை காண முடிகிறதா?

நீதிமன்றங்களை எவ்வாறு நடத்தினீர்கள் என்று எமக்குத் தெரியும். அலரி மாளிகையில்தான் முடிவுகள் எடுக்கப்பட்டன. பிணைமுறி மோசடியை வெளியில் கொண்டுவந்ததாலே எனக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார்கள்.

எமது ஆட்சியில் நாம் யாரையும் பழிவாங்கவில்லை. ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதை தடுக்கவோ குழப்பவோ இல்லை. பழி வாங்குவதை நிறுத்தமாறு ஜனாதிபதியும் பிரதமரும் எமக்கு கூறியுள்ளனர். ஜனாதிபதியை விரும்பியவாறு விமர்சிக்க முடிகிறது. நாட்டுக்காக சிறந்த கொள்கைகளை கொண்டுவந்தவரை விமர்சிக்கின்றனர்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவாகி முதலாம் வருடத்தில் 1.3 பில்லியன் ரூபாதான் செலவிட்டார். மைத்திரிபால சிரிசேன 3.07 பில்லியன் ரூபா செலவிட்டார். கோத்தபாய ராஜபக்‌ஷ 1.7 பில்லியன் ரூபாவை மக்களுக்காக எஞ்சவைத்தார். 200 வாகனங்களை முன்னாள் ஜனாதிபதி பயன்படுத்தினார். ஆனால் எமது ஜனாதிபதி 10 வாகனங்களை மாத்திரம்தான் பாவிக்கிறார் தனியார் வாகனங்களுக்கான எரிபொருள் செலவை அவரே செய்கிறார்.

15-20 வாகனங்களை கடந்த அரசில் அமைச்சர்கள் பயன்படுத்தினார்கள். ஆனால் எமது அமைச்சர்களுக்கு 3 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2 வருடத்தில் புதிய வாகனம் தருவிக்க அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் உங்கள் ஆட்சியில் புதிய வாகனங்கள் வாங்கப்பட்டன.

ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் பெரும்பகுதி கோவிட் பிரச்சினையிலே சென்றது. நாட்டை கட்டியெழுப்புவதை ஒருபக்கம் வைத்து மக்களை வாழ வைக்க ஜனாதிபதி பணியாற்றுகின்றார் என்றார்.

No comments:

Post a Comment