அர்ஜுன் மகேந்திரன் எங்கு உள்ளாரென ரணிலுக்கு மட்டுமே தெரியும் : மஹிந்த அமரவீர - News View

Breaking

Wednesday, November 24, 2021

அர்ஜுன் மகேந்திரன் எங்கு உள்ளாரென ரணிலுக்கு மட்டுமே தெரியும் : மஹிந்த அமரவீர

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

அர்ஜுன மஹேந்திரனை நாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியை நாம் கைவிடவில்லை, ஆனால் இதற்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய ஒரே நபர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே, அர்ஜுன மஹேந்திரன் எங்கு உள்ளார் என அவருக்கு மட்டுமே தெரியும் என அமைச்சர் மஹிந்த அமரவீர சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (23) ஜனாதிபதி, பிரதமரின் அமைச்சுக்களின் செலவீனத் தலைப்புக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், அர்ஜுன மஹேந்திரனை நாட்டிற்கு வரவழைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது என ஒரு சிலர் கூறுகின்றனர். யார் என்ன கூறினாலும் நாம் அதனை கை விடமாட்டோம். அவரை கண்டிப்பாக இந்த நாட்டிற்கு கொண்டுவருவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

ஆனால் இதற்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய ஒரே நபர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. ஏனென்றால் அர்ஜுன மஹேந்திரன் எங்கு உள்ளார் என்பது ரணில் விக்கிரமசிங்கவிற்கு மட்டுமே தெரியும்.

அது குறித்த தகவல்களை எமக்கு பெற்றுக் கொடுத்தால் கண்டிப்பாக அர்ஜுன மஹேந்திரனை நாட்டுக்கு கொண்டுவந்து அவருக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க முடியும்.

அதேபோல் இந்த நாட்டை நாசமாக்கவோ அல்லது வீழ்ச்சியின் பக்கமும் கொண்டு செல்ல ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒருபோதும் இடமளிக்காது. ஜனாதிபதியின் மீது நம்பிக்கை வைத்து அவருடன் இணைந்து அரசாங்கத்தை முன்னெடுத்து செல்கின்றோம். அரசாங்கத்தை பலப்படுத்தி நாட்டை மீட்டெடுப்போம் என்றார்.

No comments:

Post a Comment