எம்.எஸ். தௌபீக் எம்பியின் இல்லத்தின் மீது தாக்குதல் ! - News View

Breaking

Tuesday, November 23, 2021

எம்.எஸ். தௌபீக் எம்பியின் இல்லத்தின் மீது தாக்குதல் !

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி ஆற்றில் இன்று (23) நிகழ்ந்த படகு விபத்தில்  பாடசாலை மாணவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து ஆத்திரமடைந்த இளைஞர்கள் கிண்ணியாவின் பல இடங்களில்  எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் பிரதேச செயலகம், வைத்தியசாலை மற்றும் ஐ.ம.ச. எம்.பியும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினருமான எம்.எஸ். தௌபீக்கின் வீட்டுக்கு முன்பும் இடம்பெற்றது.

குறித்த படகு சேவைக்கு யார் அனுமதி வழங்கியது? இந்த படகு சேவையின் பாதுகாப்பு தொடர்பாக யார் உத்தரவாதம் வழங்கியது? நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள்  பயணிக்கும் இந்த ஆற்றைக் கடப்பதற்கு ஏன் பாதுகாப்பான மாற்று வழி செய்து தரப்படவில்லை போன்ற  கோஷங்களை முன்வைத்து இளைஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்கின் வீடு பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாது  இடிந்து விழும் நிலையில் இருந்த இந்த குறிஞ்சாக்கேணி பாலத்தை புதிதாக நிர்மாணித்து தரக்கோரி பொதுமக்கள் பல ஆண்டுகளாக போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர்.

இதன் பயனாக கடந்த ஆண்டு அரசாங்கம் இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்திருந்த நிலையில் புதிய பாலத்தின் நிர்மாண வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த நிலையில்  இந்த பாலத்திற்கு இரண்டு படகு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதில் ஒன்று தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் இருந்து இன்று (23) காலை பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களுடன் பொதுமக்கள் உள்ளிட்ட 21 பேர் படகில் பயணித்த நிலையில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் காப்பாற்றப்பட்ட 13 பேர் கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் மேலும் 2 பேர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் உள்ளூராட்சி ஆணையாளர் என். மணிவண்ணனுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து உடனடி விசாரணை நடாத்தி, பாலத்தை இயக்க அனுமதி வழங்கியவர் யார், பராமரிப்பை மேற்கொண்டவர் யார் உள்ளிட்ட விடயங்களை ஆராய்ந்து தெரிவிக்குமாறு ஆளுநர் வலியுறுத்தினார்.

விசாரணைகளை மேற்கொள்வதற்காக மாகாண நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி. முத்துபண்டா தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை நடாத்த விசேட பொலிஸ் குழுவொன்றை நியமிக்குமாறும், திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

அப்துல்சலாம் யாசீம்

No comments:

Post a Comment