கொவிட் நிலவரம் என்பதால் எம்மால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்று கருத வேண்டாம் என்கிறார் ஜீவன் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 23, 2021

கொவிட் நிலவரம் என்பதால் எம்மால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்று கருத வேண்டாம் என்கிறார் ஜீவன்

(எம்.மனோசித்ரா)

கொவிட் நிலவரம் என்பதால் எம்மால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்று கருத வேண்டாம். இலங்கை தொழிலாளர் காங்ரஸ் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தயாராவதாகவும், கம்பனிகள் அவற்றை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்றும் முதலாளிமார் சம்மேளனத்துடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்ரசின் பொதுச் செயலாளர் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள், கம்பனிகள் மற்றும் முதலாளிமார் சம்மேளனம் ஆகியவற்றுக்கிடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், முதலாளிமார் சம்மேளனத்துடனான சந்திப்பில் மக்களின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைத்தோம். குறிப்பாக சில கம்பனிகள் இதுவரையிலும் 1,000 ரூபா சம்பளத்தினை முழுமையாக வழங்கவில்லை. ஒரு கிலோ கொழுந்திற்கு 40 ரூபா மாத்திரமே வழங்கப்படுகிறது.

எனினும் கம்பனிகள் இந்த 40 ரூபாவைக் கூட முறையாக வழங்குவதில்லை. நாளொன்றுக்கு 20 கிலோ கொழுந்து பறித்தால் மாத்திரமே 1000 ரூபா சம்பளம் வழங்கப்படும் என்று சில கம்பனிகள் நிபந்தனைகளை விதிக்கின்றன. இது போன்ற விடயங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை நாம் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம்.

அது மாத்திரமின்றி தற்போது கொவிட் நிலைவரம் என்பதால் எம்மால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்று கருத வேண்டாம். எவ்வாறிருப்பினும் நாம் மக்களின் பாதுகாப்பிற்கே முன்னுரிமையளித்து சிந்திக்கின்றோம்.

எனினும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தயாராவதாகவும், கம்பனிகள் அவற்றுக்கு தயாராக வேண்டும் என்றும் நாம் எச்சரித்துள்ளோம்.

தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணையில் எதிர்வரும் வாரங்களில் சிறந்த முன்னேற்றத்தினை அடைய முடியும் என்று எதிர்பார்க்கின்றோம்.

எமது இலக்கு 1,000 அல்லது 1,500 ரூபாய் சம்பளம் அல்ல. மக்களின் நன்மையே எமது இலக்காகும். சம்பள நிர்ணய சபையின் ஊடாக 1,000 ரூபா வழங்கப்பட்டது. நாமும் அதனை நம்பியே வாக்களித்தோம். அரசாங்கம் இது தொடர்பில் அவதானம் செலுத்தும் என்று எண்ணினோம். தற்போது தொழில் அமைச்சின் கீழ் பல பிரச்சினைகள் உள்ளன. அந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படுவதாகவும் தெரியவில்லை.

கூட்டு ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டால் மாத்திரமே நாடும், மலையகமும் முன்னேரும் என்று பலர் கூறினர். அதனால் இன்று கூட்டு ஒப்பந்தமும் இல்லாமல் போயுள்ளது. அன்று இவ்வாறான கருத்துக்களை வெளியிட்ட தொழிற்சங்கங்கள் தற்போது அமைதியாகவுள்ளன.

பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் பதாதைகளை ஏந்துபவர்கள் மக்களுக்கு ஆதரவாக பதாதைகளை ஏந்தலாமல்லவா? அந்த வகையில் கூட்டு ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை தற்போது அனைவரும் அறிந்து கொண்டிருப்பர். மக்கள் கூட்டு ஒப்பந்தம் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் காணப்படுவார்களாயின் எமது நிலைப்பாடும் அதுவேயாகும் என்றார்.

No comments:

Post a Comment