முல்லைத்தீவில் இடம்பெற்ற “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியின் கருத்தறியும் கூட்டமும் தேரர்களின் நடவடிக்கையும் ! - News View

Breaking

Tuesday, November 23, 2021

முல்லைத்தீவில் இடம்பெற்ற “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணியின் கருத்தறியும் கூட்டமும் தேரர்களின் நடவடிக்கையும் !

“ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியின் வடக்கு மாகாணத்தில் மூன்றாவது கூட்டம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (22) இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டம் ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான கருத்தறியும் கூட்டம் செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தலைமையிலான செயலணியின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றுள்ளது.

இதன்போது ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்ட சமூக மட்ட உறுப்பினர்களிடம் மட்டும் ஒரே நாடு, ஒரே சட்டம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் கேட்டறியப்பட்டன.

இதன்போது நடைபெற்ற செய்தி சேகரிப்பதற்கு சென்ற முல்லைத்தீவு பிரதேச ஊடகவியலாளர்களுக்கு கருத்தறியும் கூட்டம் நடைபெற்றவேளை அனுமதி மறுக்கப்பட்டதோடு செயலணியின் கூட்டத்தின் இறுதியில் ஊடகவியலாளர்களை சந்தித்து செயலணியின் தலைவர் ஞானசார தேரர் கருத்து தெரிவித்தார்.

விசேட பொலிஸ் பாதுகாப்புடன் ஞானசார தேரர் தலைமையிலான செயலணி முல்லைத்தீவுக்கு பயணம் மேற்கொண்டிருந்ததோடு செயலணியின் கூட்டம் இடம்பெற்ற மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படுபவர்கள் தொடர்பிலான முடிவுகளை சில பௌத்த தேரர்களே எடுப்பதை அவதானிக்க முடிந்ததது.

ஒவ்வொரு ஊடகவியலாளரின் பின்னாலும் ஒருவர் நிறுத்தப்பட்டிருந்ததோடு செயலணி தலைவரிடம் கேள்வி கேட்ட ஊடகவியலாளர்களையும் பௌத்த பிக்கு ஒருவர் தொலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மண்டபத்துக்குள் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்ட பின்னர் செயலணியிடம் கருத்து தெரிவித்தவர்களின் கருத்துக்களை காணொளியாக்கிய ஊடகவியலாளர் ஒருவரை செயலணியோடு வருகை தந்த பௌத்த பிக்கு உள்ளிட்டவர்கள் உடனடியாக ஒளிப்பதிவு செய்தவற்றை நீக்குமாறு கோரி கெமராவை வாங்கி அந்த காணொளியை நீக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு முல்லைத்தீவுக்கு சென்றிருந்த பொதுபலசேனா அமைப்பின் தலைவரை வன்னி தமிழ் இளைஞர்கள் சங்கம் வரவேற்கிறோம் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளும் பரந்தன் முல்லைத்தீவு வீதி எங்கும் ஒட்டபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

கேசரி

No comments:

Post a Comment