(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் ஐஎஸ் அமைப்பில் இருந்து திரும்பி வந்த இலங்கையர்கள் எவரும் தொடர்புபட்டிருக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) அமைச்சர் சரத் வீரசேகர அமைச்சரவை அறிவிப்பில் தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 2015 ஆம் ஆண்டில் ஐஎஸ் அமைப்புடன் குழுவொன்று சென்றது அவர்கள் நாட்டுக்கு வந்த பின்னர் புலனாய்வு பிரிவு அவர்களை பின் தொடர்ந்தனர். அவர்கள் யாரும் இதில் பங்கெடுக்கவில்லை.
திகன சம்பவத்தின் போதும் இது தொடர்பில் ஆராயப்பாட்டது. ஆனால் அவர்களில் ஒருவரும் இதில் தொடர்புபட்டிருக்கவில்லை. அவர்களுக்கு தொடர்புகள் இருக்கவில்லை. நாங்கள் சம்பவம் தொடர்பில் தெரிவுக்குழு அமைத்து விசாரணை நடத்தினோம்.
ஏப்ரல் 4 ஆம் திகதி இந்தியாவில் இருந்து தகவல் வந்த நாள் முதல் என்ன செய்தனர் என்பது தொடர்பில் எனக்கு கூறப்படவில்லை.
இறுதிக் காலத்தில் புலனாய்வுத் துறைக்கு கிடைத்த ஒரே தகவல், கபீர் ஹாசிமின் செயலாளர் ஊடாக வந்ததே. அவரையும் சுட்டுள்ளனர். அத்துடன் மட்டக்களப்பில் இருவர் கொல்லப்பட்ட போதும் அது பற்றி கூறப்படவில்லை.
புலனாய்வுத் துறையில் வீழ்ச்சி இருந்தது. அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். அது ஏன் நடந்தது என்று தேட வேண்டும். எதிர்காலத்தில் நடக்காது பார்த்துக்கொள்ள வேண்டும்.
அத்துடன் மிலேனியம் சிட்டியை நகரத்தில் வைத்துக் கொள்வது நல்லதில்லை. அதனை அகற்ற வேண்டும் என சந்திரிக்கா குமாரதுங்கவே தெரிவித்திருந்தார்.
என்றாலும் அவரின் கட்டளையை மீறி ஜெனரல் பலகல்லதான பலாத்காரமாக அதனை வைத்துக் கொண்டிருந்தார். அதனால் இது தொடர்பாக பல விடயங்கள் இருக்கின்றன. விவாதம் ஒன்றை மேற்கொள்வதாக இருந்தால் பல விடயங்களை தெரிவிக்க முடியும்.
அத்துடன் ஏப்ரல் தாக்குதல் தொடர்பான விசாரணையை அரசியலாக்காமல் முறையாக மேற்கொள்ள வேண்டும். அது தொடர்பான விசாரணை அறிக்கையை முழுமையாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
விசாரணை அறிக்கையை சட்டமா அதிபருக்கு, பாதுகாப்பு அமைச்சுக்கு, ஜனாதிபதி காரியாலயத்துக்கு வழங்க முடியுமாக இருந்தால் ஏன் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க முடியாது? ஆணைக்குழுக்களின் விசாரணை அறிக்கைகள் அனைத்தையும் சபைக்கு வழங்க வேண்டும்.
நாங்கள் கேட்டால் அதனை வழங்குவது அமைச்சரின் கடமை. இல்லாவிட்டால் அது வரப்பிரசாதத்தை மீறும் செயல் என்றார்.
இதன்போது எழுந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறுகையில், உயிரித்த ஞாயிறு தொடர்பான ஆணைக்குழுவில் விசாரணைகளின் போது பல்வேறு சாட்சியங்களை நாங்கள் வழங்கியுள்ளோம்.
ஆனால் நாங்கள் கூறியவை அறிக்கையில் இல்லை. இந்த விடயத்தில் பாராளுமன்றத்திற்கு உரிமை உள்ளது. அந்த அறிக்கையின் 23 தொகுதிகளிலும் என்ன இருக்கின்றது என்பதனை அறிந்துகொள்ள வேண்டும்.
விசாரணை அறிக்கையில் ஒரு தொகுதி மாத்திரமே பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. இந்த சம்பவத்துடன் பொறுப்புக்கூற வேண்டிய யாரேனும் இருந்தால் அவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.
அதனைத் தொடந்து எழுந்த நிராேஷன் பெரேரா தெரிவிக்கையில், அரசாங்கம் ஏப்ரல் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை விட எதிர்க்கட்சியினரை அடக்குவதற்கே முயற்சிக்கின்றது.
இரண்டு வருடங்களாகியும் தா்ககுதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை தேடிக்கொள்ள முடியாமல் இருக்கின்றது. அத்துடன் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் கத்தோலிக்க சபைகளை அடக்குவதற்கே அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது என்றார்.
அதனை தொடர்ந்த லக்ஷ்மன் கிரயெல்ல, சஹ்ரானுக்கு அரசாங்கம் சம்பளம் வழங்கியதை பிரமர் ஏற்றுக் கொண்டிருந்தார். அதபோன்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் ஏற்றுக் கொண்டிருந்தார் என்றார்.
No comments:
Post a Comment