அம்பிட்டிய சுமணரட்ண தேரரை இடம்மாற்றினால் தமிழ், சிங்கள உறவு மேலோங்கும் : இதே தவறை ஏனைய மதகுருக்கள் செய்திருந்தால் அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கும்? - இரா.துரைரெத்தினம் - News View

Breaking

Tuesday, November 23, 2021

அம்பிட்டிய சுமணரட்ண தேரரை இடம்மாற்றினால் தமிழ், சிங்கள உறவு மேலோங்கும் : இதே தவறை ஏனைய மதகுருக்கள் செய்திருந்தால் அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கும்? - இரா.துரைரெத்தினம்

மட்டக்களப்பு அம்பிட்டிய சுமணரட்ண தேரர் பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் காணிப் பிரச்சினைக்காக கடந்த 15 ஆம் திகதி சென்று அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக முறைகேடாக நடந்து கொண்டதை வன்மையாக கண்டிப்பதுடன் இவரை இடம் மாற்றப்படும் பட்சத்தில் தமிழ், சிங்கள உறவு மேலோங்கப்படும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப், பத்மநாபா மன்ற தலைவருமான இரா.துரைரெத்தினம் தெரிவித்தார்.

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரெத்தினம் திங்கட்கிழமை (22) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஒரு சில பௌத்த குருமாரும், இந்த மதகுருவும் இம்மாவட்டத்தில் கடந்த 11.11.2013 ஆம் ஆண்டு மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளருடன் ஏற்பட்ட பிரச்சினை, 13.11.2016 ஆம் ஆண்டு மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலகப்பிரிவில் கெவிளியாமடு கிராமத்தில் கிராம சேவகருடன் ஏற்பட்ட வாய்த் தகராறு, 23.10.2018 ஆம் ஆண்டு ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் மயிலம்பாவெளி என்னும் இடத்தில் மரம் வெட்டிய பொது பிரதேச செயலாளருடன், உத்தியோகத்தர்களுடனும் ஏற்பட்ட பிரச்சினை, 02.07.2020 ஆம் ஆண்டு ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் கரடியனாறு கிராமத்தில் குசலான மலையில் தொல்பொருள் தொடர்பாகவும், போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வேத்துச்சேனையில் 05.07.2020 ஆம் ஆண்டு தொல்பொருள் தொடர்பாக 20.9.2020 ஆம் ஆண்டு ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள பங்குடாவெளி பிரதான வீதியில் இலுப்படிச் சேனை (கௌரடி) என்னும் இடத்தில் தொல்பொருள் திணைக்களத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கு எதிராக செயற்பட்டமை, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் அரச உத்தியோகத்தர்களுடன் ஏற்பட்ட பிரச்சினை, 11.2021 ஆம் ஆண்டு கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள புணானை என்னும் கிராமத்தில் ஏற்பட்டுள்ள காணிப் பிரச்சினை, இறுதியாக 15.11.2021 அன்று பிரதேச செயலகத்தில் அரசஉத்தியோகத்தர்களை அச்சுறுத்தியது வரையும் குறித்த மதகுருவின் கெடுபிடிகள், அசிங்கமான நடவடிக்கைகள் நடந்து கொண்டே செல்கின்றன.

இவர் ஒரு மதகுருவிற்கான குணாம்சம், செயற்பாடு, புனிதத்தன்மை, ஓழுக்கம் உள்ள மதகுருவா? இலங்கை அரசும், பௌத்த சாசன அமைச்சும், இலங்கை நிருவாக சேவையும், உத்தியோகத்தர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சும்; மதகுருவின் வன்முறைத்தனத்தை நிறுத்துவது தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. பௌத்த மதகுரு என்பதற்காகவா? இதே தவறை ஏனைய மதகுருக்கள் செய்திருந்தால் அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கும்.

இதனால் மிகவும் சிறப்பான முறையில் செயற்பட்டு வருகின்ற அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மன உலச்சல் நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட செயற்பாடு ஒரு மதகுருவிற்கு ஏற்படையதல்ல. எனவே இந்த மதகுரு தொடர்பாக அரசாங்கம் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மையாக தமிழர்களாக வாழுகின்ற நாங்கள் பௌத்த மதகுருவை எதிர்க்கவில்லை. ஆனால் வன்முறையில் ஈடுபடுவதையும், ஒரு மதகுருவிற்கு இருக்கப்பட வேண்டிய புனிதத்தன்மை இல்லாத இந்த மதகுருவை வெறுக்கின்றோம்

எனவே பௌத்தசாசன அமைச்சு இவரை இடமாற்றம் செய்வதற்கான விடயங்களை மேற்கொள்ளுமாறு வேண்டிக் கொள்வதோடு, இவர், இடம் மாற்றப்படும் பட்சத்தில் தமிழ்,சிங்கள உறவு மேலோங்கப்படும். என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

No comments:

Post a Comment