பெண்களை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் இரட்டை அர்த்தத்தில், ஆளும் கட்சி உறுப்பினரின் கீழ்த்தரமான கருத்து : சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரோஹினி குமாரி சபாநாயகரிடம் முறைப்பாடு - News View

Breaking

Tuesday, November 23, 2021

பெண்களை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் இரட்டை அர்த்தத்தில், ஆளும் கட்சி உறுப்பினரின் கீழ்த்தரமான கருத்து : சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரோஹினி குமாரி சபாநாயகரிடம் முறைப்பாடு

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

பெண்களை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் இரட்டை அர்த்தத்தில், ஆளும் கட்சி உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி கீழ்த்தரமான வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரட்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், பாராளுமன்றத்தில் 20 ஆம் திகதி திஸ்ஸ குட்டியாராச்சி பாராளுமன்றத்தில் மேற்கொண்ட உரையில், அபகீர்த்தி, வஞ்சித்தல் மற்றும் வக்கிரத்தனமான வகையில் சபையில் ஒருபோதும் பயன்படுத்தப்படாத வசனத்தை பயன்படுத்தியிருந்தார்.

அன்றையதினம் நான் சபையில் தெரிவிக்காத வசனத்தையும் பொருளொன்றையும், அதன் விலையையும் கூறி மகிழ்ச்சியா என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு நான் எந்தப் பொருளின் பெயரையும் அவ்வாறு குறிப்பிட்டிருக்கவில்லை. ஆனால் அவர் குறிப்பிட்ட பொருளின் பெயரை குறிப்பிட்டு இரட்டை அர்த்தத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அந்த வசனத்தின் உள் அர்த்தத்தை பார்க்குமாறு நான் கேட்கின்றேன்.

இத்துடன் இந்த சபையில் இல்லாத, இங்கு கூறும் கருத்துக்களுக்கு எந்த வகையிலும் தொடர்புபடாத ஜலனி பிரேமதாச தொடர்பிலும் குறிப்பிட்டு அவர் தொடர்பிலும் அவருக்கு அகௌரவப்படுத்தும் வகையில் கீழ்த்தரமான வசனத்தை பயன்படுத்தியிருந்தார்.

அவர் இந்தக் கருத்தை கூறும் போது, சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினருக்கு நளின் பண்டார எம்.பி. அவ்வாறான அநாகரிகமான வசனத்தை சுட்டிக்காட்டி, ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் அந்தக் கருத்துக்கள் தொடர்பில் அவர் புரிந்து கொள்ளவில்லை. அப்படியாயின் அந்த ஆசனத்தில் இருந்த அஜித் ராஜபக்‌ஷவுக்கு அந்த கதிரையின் முக்கியத்துவம் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு நான் சபாநாயகரிடம் கேட்கின்றேன்.

அத்துடன் ஆளும் கட்சி உறுப்பினர் பெண்களை அபகீர்த்திக்குள்ளாக்கி தெரிவித்த கருத்துக்களை பிரதமர், சபாநாயகர், சபை முதல்வர், ஆளும் கட்சி பிரதம கொரடா ஆகியோர் அனுமதிக்கின்றீர்களா என்று கேட்கின்றேன். ராஜபக்‌ஷவினர்களும் இதனை ஏற்றுக் கொள்கின்றீர்களா? என கேட்கின்றேன் என்றார்.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சி பிரதம கொரடா லக்‌ஷ்மன் கிரியெல்ல, இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் குறித்த சந்தர்ப்பத்தில் சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர். தலைமை தாங்க தகுதியில்லை என்றார்.

இதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில், இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து நாளையதினம் (இன்றி) அறிவிப்பேன் என்றார்.

No comments:

Post a Comment