கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப் பாதைக்கு அனுமதி வழங்கியது எவ்வாறு? இதற்கு யார் காரணம் ? : பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் இம்ரான் மஹ்ரூப் - News View

Breaking

Tuesday, November 23, 2021

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப் பாதைக்கு அனுமதி வழங்கியது எவ்வாறு? இதற்கு யார் காரணம் ? : பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் இம்ரான் மஹ்ரூப்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தை புனரமைத்துத்தருமாறு கோரிக்கை விடுத்த வேளையில் விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் கேலித்தனமாக கேவலமாக சிரித்தார், அந்த சிரிப்பின் விளைவாக பல உயிர்களை காவுகொடுத்து விட்டோம் என சபையில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் ஆவேசப்பட்டதுடன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியில்லாது படகுப் பாதைக்கு அனுமதி வழங்கியது எவ்வாறு? இதற்கு யார் காரணம் எனவும் இம்ரான் மஹ்ரூப் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் சபை அமர்வுகள் கூடிய வேளையில் விசேட கூற்றொன்றை எழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப், கிண்ணியா பிரதேசத்தில் படகு கவிழ்ந்த விவகாரம் குறித்து சபையில் கூற்றொன்றை முன்வைத்தார்.

அவர் கூறுகையில், கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் இன்று அனர்த்தமொன்று இடம்பெற்றுள்ளது. குறிஞ்சாக்கேணி பாலம் புனரமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த பாதையை நிர்மாணிப்பதற்கு பதிலாக தற்காலிகமாக போடப்பட்ட பாதையில் விபத்தொன்று ஏற்பட்டு தற்போது வரையில் பத்துப் பேர் இறந்துள்ளனர். பாடசாலை செல்லும் சிறுவர்கள் இதில் உள்ளடங்குகின்றனர். இது மிகப்பெரிய பிரச்சினையாக காணப்படுகின்றது.

இந்த பாலம் புனரமைக்கும் விடயம் குறித்து இதற்கு முன்னரும் நான் இதே சபையில் முன்வைத்தேன். உரிய அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய வேளையில், பதில் பாதையொன்று உருவாக்காது எவ்வாறு பால நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றது என கேள்வி எழுப்பிய வேளையில் விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் இதனை ஒரு கேவலமான அல்லது நகைப்புக்குரிய விடயமாக எடுத்துக் கொண்டார். அதற்கான விளைவாக இன்று பல உயிர்கள் காவு கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த தற்காலிக படகு பாதை யாருடைய அனுமதியுடன் இயங்குகின்றது. சட்டமுறைப்படி இயங்குகின்றதா? யார் பொறுப்பு? இதற்கு அரசாங்கம் கூறும் பதில் என்னவென கேள்வி எழுப்பினார்.

No comments:

Post a Comment