கிண்ணியா குறிஞ்சாக்கேணி கடல் விபத்து : தரமில்லாத படகுக்கு எவ்வாறு அனுமதியளிக்கப்பட்டது? : முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் கேள்வி - News View

Breaking

Tuesday, November 23, 2021

கிண்ணியா குறிஞ்சாக்கேணி கடல் விபத்து : தரமில்லாத படகுக்கு எவ்வாறு அனுமதியளிக்கப்பட்டது? : முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் கேள்வி

பயணிகள் போக்கு வரத்திற்கு தகுதியற்ற இழுவைப் படகுப் பாதையை, உரிய அனுமதியின்றி சேவையில் ஈடுபடுத்தியதாலேயே கிண்ணியா, குறிஞ்சாக்கேணி கடல் அனர்த்தம் நேர்ந்து, உயிர்கள் பலியாகியுள்ளதாகவும், அது தொடர்பில் ஆராய்ந்து அவசியமான நடவடிக்கை மேற்கொள்ளப் பட வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் செவ்வாய்க்கிழமை (23) பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

சபாநாயகரை விளித்து அவர் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் சுட்டிக் காட்டியபோது மேலும் தெரிவித்ததாவது, பெருந்தெருக்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் குறிஞ்சாக்கேணிப் பாலம் அமைக்கப்படுவதற்கு நன்றி செலுத்துகின்ற அதேவேளையில், பாலம் அமைக்கப்படும் வரை அடுத்த மாதத்திலிருந்து பிரயாணிகள் போக்கு வரத்திற்கான படகுப் பாதையொன்று பயன்படுத்தப்படவிருந்த நிலையில், தரமில்லாத படகு ஒன்றிற்கு ஏன் அனுமதியளிக்கப்பட்டது? அதனால் அப்பாவி மாணவர்கள் உயிர் இழந்துள்ளனர்.

குறிஞ்சாக்கேணியிலிருந்து பெரிய கிண்ணியாவுக்கு ஒரு கிலோ மீட்டர் அளவான தூரத்தையே கடலினுடாக கடக்க வேண்டியுள்ளது.

முன்னரும் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் மூதூர் கடல் பிரதேசத்தில் இவ்வாறானதொரு விபத்தில் 150 க்கும் மேற்பட்ட உயிர்கள் காவு கொள்ளப்பட்டன என்றார்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் இந்த விபத்துத் தொடர்பில் பாராளுமன்றத்தில் விசனம் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment