சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இருக்க வேண்டுமென்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடு : விமர்சிக்கின்றார்கள் என்பதற்காக விலகமாட்டோம் என்கிறார் மஹிந்த அமரவீர - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 23, 2021

சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இருக்க வேண்டுமென்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடு : விமர்சிக்கின்றார்கள் என்பதற்காக விலகமாட்டோம் என்கிறார் மஹிந்த அமரவீர

(எம்.மனோசித்ரா)

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இருக்க வேண்டும் என்பதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிலைப்படாகும். 2014 இல் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோல்வியடையச் செய்தவர்கள் இன்று எம்மை விமர்சிக்கின்றார்கள் என்பதற்காக சுதந்திர கட்சி அரசாங்கத்திலிருந்து விலகாது என்று சுற்றாடல்த்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்திற்கான புதிய தொகுதி அமைப்பாளர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை திங்கட்கிழமை (22) சு.க. தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன் போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், வேலைகளை செய்ய முடியாதவர்களே ஒவ்வொரு கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். அவற்றை நாம் கவனத்தில் கொள்வதில்லை. காரணம் நாம் ஒப்பந்தங்களை முன்னெடுத்திருப்பது அவர்களுடன் அல்ல.

தற்போது சுதந்திர கட்சியை விமர்சித்துக் கொண்டிருப்பவர்கள் 2014 இல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தோல்வியடையச் செய்தவர்களாவர். இவ்வாறானவர்கள் அடுத்த முறையும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு எதையாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நாம் பொதுஜன பெரமுனவின் தலைவர்களுடனேயே ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளோம். அதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இருக்க வேண்டும் என்பதையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறுகின்றார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் பங்காளி கட்சிகள் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கோ அல்லது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கோ ஒத்துழைப்பு வழங்கும் வகையில் சுதந்திர கட்சி நடவடிக்கைகளை முன்னெடுக்காது.

நாம் எடுக்கும் அனைத்து தீர்மானங்களும் நாட்டுக்கானவையாகும். எதிர்க்கட்சி கூறும் வகையில் எம்மால் செயற்பட முடியாது. எம்மனதில் பல விடயங்கள் காணப்பட்டாலும் எதிர்க்கட்சி நன்மை கிடைக்கும் வகையில் நாம் தீர்மானங்களை எடுக்கப் போவதில்லை என்றார்.

No comments:

Post a Comment